கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 24ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவு

கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 24ம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் 3 நாட்கள் காவல் கடந்த 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 24ம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக போது, அவரின் மகன் கார்த்தி சிதம்பரம், அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ10 லட்சம் கமிஷன் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தனது தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி, கார்த்தி சிதம்பரம் அந்நிறுவனத்தை தனது கட்டுபாட்டில் இயக்கி வந்தாகவும், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து கார்த்திக்கு பெருமளவில் பணம் தரப்பட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டப்பட்டு வந்தது.

பின்பு, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 28ம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் பிப். 1ம் தேதி அனுமதி அளித்தது. கடந்த 6-ஆம் தேதி அவரது காவல் முடிவடைந்த நிலையில், மேலும் 3 நாட்களுக்கு சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி சுனில் ராணா முன்பு இன்று ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்க வேண்டும் என்று சிபிஐ அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அவரை வரும் 24-ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜாமின் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கார்த்தியின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

×Close
×Close