Advertisment

சமூக ஊடகங்களில் தலிபான் ஆதரவு பதிவு; அஸ்ஸாமில் 15 பேர் உபா சட்டத்தில் கைது

இந்த கைது நடவடிக்கைகள் குறித்து பேசிய அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, எந்த அச்சமும் சார்பும் இல்லாமல் செயல்பட போலீசாருக்கு உத்தரவிட்டதாக கூறினார்.

author-image
WebDesk
New Update
15 people arrest under UAPA, UAPA, Assam, pro Taliban posts, 15 பேர் கைது, அஸ்ஸாம், உபா சட்டம், தலிபான், ஆஃப்கானிஸ்தான், தலிபான் ஆதரவு பதிவு காரணமாக 15 பேர் கைது, 15 people arrest, taliban, afghanistan

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை ஆதரித்து சமூக ஊடகங்களில் பதிவிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 15 பேர் அஸ்ஸாமில் உபா சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

அஸ்ஸாமில் பி.காம் படிக்கிற 18 வயது மாணவர் ஒருவர், 24 வயது மருத்துவ மாணவர், 26 வயது உள்ளூர் பத்திரிக்கையாளர் மற்றும் ஏ.ஐ.யு.டி.எஃப் உடன் தொடர்புடைய 49 வயதானவர் உள்ளிட்ட 15 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை ஆதரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக இவர்கள் மீது காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், கிட்டத்தட்ட இவர்கள் அனைவரும் உபா சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கைகள் குறித்து பேசிய அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அச்சமும் சார்பும் இல்லாமல் செயல்பட போலீசாருக்கு உத்தரவிட்டதாக கூறினார். ட்விட்டரில் உள்ளூர் செய்தி சேனலின் பதிவைப் பகிர்ந்த சர்மா, “அமைதியையும் நல்லிணக்கத்தையும் பராமரிக்க அனைவரிடமிருந்தும் ஒத்துழைப்பு தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

அஸ்ஸாம் மாநில சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு டிஜிபி ஜி.பி. சிங் 10 மாவட்டங்களைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட 14 பேர்களின் பட்டியலை ட்வீட் செய்துள்ளார் - அவர்கள் கம்ரூப் (ரூரல்), தர்ராங், பர்பேட்டா, துப்ரி, தெற்கு சல்மாரா, கோல்பாரா, ஹோஜாய் மற்றும் பராக் பள்ளத்தாக்கு மாவட்டங்களான ஹைலகண்டி, கச்சார் மற்றும் கரிம்கஞ்ச் அகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலோர் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை கைது செய்யப்பட்டனர். சனிக்கிழமை மாலை, பக்ஸா மாவட்டத்தில் இருந்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படும் பதிவுகளைப் பகிர்ந்து கொள்ள பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் மறுத்தாலும், ஜி.பி சிங் தி சண்டே எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “அனைத்துப் பதிவுகளும் இந்திய சட்டத்தின் தண்டனை விதிகளுக்கு உட்படுபவைகளாக உள்ளன. IPC பிரிவுகள் 120 (B)/ 153 (A)/ 505 (1) (c)/ 505 (2) IPC (சதி, அவதூறு மதக் குற்றம் உள்பட) ஆகிய பிரிவுகளின் கீழ் பெரும்பாலான கைதுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் உபா சட்டத்தின் 39வது பிரிவின் கீழ், (பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பது) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார். அதோடு, அவர்களுடைய பதிவுகள் இன்னும் அப்படியே இருக்கிறதா என்று சரிபார்க்கப்படுகிறது என்று கூறினார்.

இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளியிட்ட கருத்துகள் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பவை என்று கருதுகிறோம் என்று டி.ஐ.ஜி வயலட் பருவா கூறினார். “நம்முடைய சமூக ஊடக கண்காணிப்பு செல் கண்காணித்து வருகிறது. இந்த பதிவுகளை நாங்கள் கவனித்தோம்,. அதன்படி நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்” என்று அவர் கூறினார்.

கம்ருப் மாவட்டம் (கிராமப்புற) எஸ்.பி ஹிதேஷ் சந்திர கம்ருப் மாவட்டத்தில் இருவர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார். அபு பக்கர் சித்திக், அஃப்கா கான் அவிலெக் (55), ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஆசிரியராகவும், சைதுல் ஹாக் (29), கரிம்கஞ்சில் அமைந்துள்ள 21வது AP (IR) Bn-l காவலராகவும் உள்ளார்.

தர்ராங்கில் இருந்து, தலிபான்களுக்கு ஆதரவாக பதிவிட்டதற்காக மவுலானா பாசுல் கரீம் (49) என்பவரை போலீசார் கைது செய்தனர். “அவர் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (AIUDF) பொதுச் செயலாளர் மற்றும் மாநில ஜாமியத்தின் செயலாளர்” என்று தர்ராங் மாவட்ட எஸ்.பி சுசாந்தா பிஸ்வா சர்மா கூறினார். விசாரணை முடியும் வரை கரீம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஏஐயுடிஎஃப் செய்தி தொடர்பாளர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

பார்பேட்டா மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட மொசிதுல் இஸ்லாம் (25) மற்றும் ஃபரூக் ஹுசைன் கான் (32) இருவரும், தலிபான்களை புகழ்கின்றனர் என்று பார்பேட்டா போலீசார் தெரிவித்தனர். “இருவரும் வேலையில்லாதவர்கள் … அவர்கள் ஏதாவது ஒரு குழுவைச் சேர்ந்தவர்களா என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். நாங்கள் இப்போது எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ள முடியாது” என்று பார்பேட்டா எஸ்.பி அமிதவா சின்ஹா கூறினார்.

கந்தகர் நூர் ஆலோம் (51), அமைப்புசாரா சிறு தொழில்களில் பணியாற்றி வருகிறார். அவர் தெற்கு சல்மாரா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். “இவருக்கு அமைப்புகளுடன் தொடர்புகள் உள்ளதா என்பது எங்களுக்குத் தெரியாது … நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று தெற்கு சல்மாரா மாவட்டத்தின் எஸ்.பி சுபோத் கிருஷ்ண சோனோவால் கூறினார்.

கச்சார் எஸ்பி ராமன் தில்லான், சோனாய் நகரைச் சேர்ந்த 30 வயதான ஜாவெத் மஜும்தாரை கைது செய்ததாக கூறினார். “அவர் ஒரு வங்கியில் வேலை செய்கிறார் … அவருடைய பதிவில், தலிபான்கள் என்ன செய்தாலும் நல்ல காரியம் செய்துள்ளனர்” என்று கூறினார்.

ஹைலகண்டியில், எம்டி நதிம் அக்தர் (23), “முகநூலில் தலிபான்களுக்கு ஆதரவாக வகுப்புவாத ஆத்திரமூட்டும் கருத்துகளை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டார்” என்று ஹைலகண்டி எஸ்பி கௌரவ் உபாத்யாய் கூறினார். “அவர் தேஜ்பூர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் செமஸ்டர் படிக்கிறார்” என்று உபாத்யாய் கூறினார்.

கரிம்கஞ்சில் ஒரு பயிற்சி மையம்/ தனியார் பள்ளி அசிரியர் முஜிப் உத்தீன் (24), மற்றும் பி.காம் படிக்கிற 18 வயது மொர்துசா ஹுசைன் கான் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்ட்டுள்ளார்கள். “இவர்கள் தலிபான்களை ஆதரிக்கிறார்கள் … தாலிபான் போன்ற தடை செய்யப்பட்ட அமைப்பை நீங்கள் வெளிப்படையாக ஆதரித்தால் … நாங்கள் உபா போன்ற ஏற்பாடுகளை பயன்படுத்த வேண்டியிருக்கும்” என்று கரிம்கஞ்ச் SP பத்மநாப் பருவா கூறினார்.

இந்த நடவடிக்கையில் முதலில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான கோல்பாரா மாவட்டத்தின் யாசீன் கான் (26), ஆகஸ்ட் 17ம் தேதி கைது செய்யப்பட்டார். “அவர் லக்கிபூரில் ஒரு மௌலானாவாகவும் சில சிறிய கடைகளையும் வைத்திருக்கிறார்” என்று கோல்பாரா மாவட்ட எஸ்பி வி.வி. ராகேஷ் ரெட்டி கூறினார். கான் அழைத்துச் செல்லப்பட்டபோது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று ரெட்டி கூறினார்.

பசிருத்தீன் லஸ்கர் (65) ஹோஜாய் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் ஓய்வு பெற்ற மௌலானா … அவரது பதிவு தலிபான்களுக்கு ஆதரவாக இருந்தது. மக்களிடையே சச்சரவை உருவாக்கியது” என்று ஹோஜாய் எஸ்பி பருன் புரகயஸ்தா கூறினார்.

துப்ரி மாவட்டத்தைச் சேர்ந்த, 27 வயதான சையத் அகமது மற்றும் 25 வயதான அர்மன் ஹுசைன் கைது செய்யப்பட்டனர். தி சண்டே எக்ஸ்பிரஸ் துப்ரி மாவட்டத்தின் எஸ்பி அபிஜித் குராவிடம் கருத்து கேட்க முடியவில்லை என்றாலும், அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், “தாலிபான்களுக்கு ஆதரவான பதிவுகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அந்த பதிவிட்ட பயனர்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். நாங்கள் இப்போது அவர்களிடம் விசாரணை செய்கிறோம் … ஒரு பதிவு தனிப்பட்ட கணக்கிலிருந்தும் மற்றொன்று ஒரு பக்கத்திலிருந்தும் பதிவிடப்பட்டுள்ளது.” என்று கூறினார். அஸ்ஸாம் சிறப்பு டிஜிபி ஜி.பி சிங், “துப்ரி போலீசார் வழக்கு பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறினார்.

பக்சா மாவட்டத்தைச் சேர்ந்த சுன்பாரி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான ரபிகுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டதை ஜி.பி சிங் உறுதி செய்தார். வெள்ளிக்கிழமை இரவு தலிபான்களுக்கு ஆதரவாக சமூக ஊடக பதிவு தொடர்பாக இஸ்லாம் கைது செய்யப்பட்டார். இஸ்லாம் ஒரு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இரண்டு உள்ளூர் செய்தி பத்திரிகைகளுக்கு நிருபராக உள்ளார்.

உபா சட்டம் அபயன்படுத்தப்பட்டது குறித்து ​​சிங் கூறுகையில், “தெஹ்ரீக்-இ-தலிபான் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் உள்ளது… இந்த பட்டியல் ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது … வெளியுறவுத் துறை அமைச்சகப் பட்டியலின் 33வது பதிவு ஐ.நா பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளின் பெயர்களை வழங்குகிறது. இந்த கட்டத்தில் நாங்கள் நடவடிக்கை எடுத்தால் போதும்.” என்று கூறினார்.

போலீஸ் டி.ஐ.ஜி பருஹா, இதுபோன்ற பதிவுகள் ஏதேனும் தங்கள் கவனத்திற்கு வந்தால் போலீசாருக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் சமூக ஊடக தளத்தில் #தாலிபான் ஆதரவு கருத்துக்களுக்கு எதிராக #அசாம்போலிஸ் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தகைய நபர்கள் மீது நாங்கள் கிரிமினல் வழக்குகளை பதிவு செய்கிறோம். இதுபோல, ஏதாவது உங்கள் கவனத்திற்கு வந்தால் தயவுசெய்து போலீசாருக்கு தெரியப்படுத்துங்கள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அஸ்ஸாம் சிறப்பு டிஜிபி ஜி.பி சிங் கூறுகையில், “சமூக ஊடகங்களில் அசாம் மற்றும் இந்தியாவுக்கு எதிரான அல்லது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான பதிவுகளை மக்கள் பதிவிடக்கூடாது என்று நான் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன் … சமூக ஊடகங்களில் பதிவிடுவதற்கு முன்பு மக்கள் சிந்திக்க வேண்டும் … சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Taliban Take Kabul Assam Uapa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment