மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக முன்னதாக ஜனவரி 29 ம் தேதியன்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 29ம் தேதி தொடங்குகிறது. அன்று, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடக்க உரையாற்றுகிறார்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் , திமுக, திருணாமுல் காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி கட்சி, இராச்டிரிய ஜனதா தளம், சிபிஐ, சிபிஐ (எம்) உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
இதுதொர்பான வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், ” இந்த மூன்று வேளாண் சட்டங்களும் அரசியலமைப்பின் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரனாது, மாநில உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், “மூன்று வேளாண் சட்டங்களால் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மெல்ல மெல்ல நீர்த்து போகும். விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை, நெல் கொள்முதல், பொது விநியோகம் போன்றவைகளே உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையாக உள்ளன.
மாநில அரசுகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் எந்தவித ஆலோசனையுமின்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. எதிர்க்கட்சிகளின் குரல்கள் ஒடுக்கப்பட்டு நாடாளுமன்ற விதிகளும், நடைமுறைகளும், மரபுகளும் முழுவதும் புறக்கணிக்கப்பட்டு இச்சட்டங்கள் இயற்றப்பட்டது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களும் அரசியலமைப்பின் கீழ் செல்லுபடியாகுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதியன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
கோவிட் – 19 தொற்று காரணமாக மாநிலங்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாம் கட்ட அமர்வு அடுத்த மாதம் 15-ம் தேதியுடன் முடிவடையும்.
இரண்டாம் கட்ட அமர்வு மார்ச் மாதம் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 8-ம் தேதிவரை நடைபெறும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook