"நாட்டுக்காக தனது உயிரையே தியாகம் செய்யும் ராணுவ வீரர்கள்தான் என்னுடைய உந்துதல். நானும் என் நாட்டின் வளர்ச்சிக்காக பங்காற்ற வேண்டும் என நினைத்தேன். அதனால், ராணுவத்தை தேர்ந்தெடுத்தேன்”, எனக்கூறும் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவான்ஷி ஜோஷி (வயது 17) ஐஐடி நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றவர். ஆனால், நாட்டிற்காக சேவை செய்ய விரும்பி, ஐஐடியில் சேர விரும்பாமல், ராணுவத்தில் சேர முடிவெடுத்திருக்கிறார். அதற்கான தேசிய பாதுகாப்பு கல்வி (என்.டி.ஏ.) நுழைவு தேர்வில் இந்தியாவிலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றிருக்கிறார் சிவான்ஷி.
“என்.டி.ஏ. கல்வி நிறுவனத்தில் பயிற்சி மிக கடினமானதாக இருக்கும் என தெரியும். ஆனால், ஐஐடியில் வாழ்க்கை மிக எளிமையானதாக இருக்கும். ஆனால், நான் கடினமான வாழ்க்கைக்கு தயாராக இருக்கிறேன். நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள்.”, என இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் சிவான்ஷி தெரிவித்தார்.
“நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும் என்பது எனது குழந்தை பருவத்திலிருந்தே நோக்கமாக இருந்தது. உத்தரகாண்ட் இளைஞர்களின் ரத்தத்தில் நாட்டின் மீதான காதல் இருக்கும்.”, என பெருமையாக கூறுகிறார் சிவான்ஷி.
தனது தம்பியும் ராணுவத்திலேயே சேர வேண்டும் என விரும்பும் சிவான்ஷி, அதற்கான முயற்சிகளுக்கு உடனிருந்து உதவிபுரிவதாக தெரிவிக்கிறார்.
“என்.டி.ஏ. நுழைவுத்தேர்வுக்காக எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லவில்லை. நான் என் தம்பிக்கு இந்த நுழைவுத்தேர்வில் வெற்றிபெற உதவி செய்வேன். அவனும் ஒருநாள் நாட்டுக்காக செய்வான் என நம்புகிறேன்”, பெருமையாக கூறும் சிவான்ஷி.