நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர் கனிமொழி எம்விஎன் சோமு உள்பட 19 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விலைவாசி உயர்வு, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவிக்கவே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் முன்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.
தொடர்ந்து, மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் கனிமொழி எம்விஎன் சோமு, ஹம்மத் அப்துல்லா, கிரிரஞ்சன், இளங்கோ, சண்முகம், கல்யாண சுந்தரம் ஆகிய 6 பேரும் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுஷ்மிதா தேவ், மவ்ஸம் நூர், சந்தா சேத்ரி, தோல சென், சந்தானு சென், அபி ரஞ்சன் பிஸ்வார், நடிமூல் ஹக்கி ஆகிய 6 பேரும், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த லிங்கையா யாதவ், ரவீந்திர வட்டிராஜூ, தாமோதர் ராவ் ஆகிய மூவரும் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மீதமுள்ள மூவரில் இருவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்ந்தவர்கள். அவர்கள் சந்தோஷ் குமார், ஏஏ ரஹீம் மற்றும் சிவதாசன் ஆகியோர் ஆவார்கள்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் மக்களவையில் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாக காங்கிரஸ் உறுப்பினர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அவர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் பிரதாபன் ஆகியோர் ஆவார்கள். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"