19 states cross pre-Covid GSDP levels in FY22; Kerala, UP lag: கொரோனா தொற்றுநோயின் அதிர்ச்சியிலிருந்து வெளிவந்து, 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொருளாதாரங்கள் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளதாகவும், அவற்றில் 7 மாநிலங்கள் 2021-22ல் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதங்களைப் பதிவுசெய்து உள்ளதாகவும், 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான அதிகாரப்பூர்வ தரவுகளின் பகுப்பாய்வு காட்டுகிறது. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களின் 2021-22 ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் கிடைக்கவில்லை.
19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் (GSDP) அளவு 2020-21 ஆம் ஆண்டில், அதாவது கொரோனாவின் தீவிர பரவல் காரணமாக நாடு தழுவிய லாக்டவுனை விதித்த 2020-21-ல் ஒரு மிகக் குறைவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக பகுப்பாய்வு காட்டுகிறது. இந்த மாநிலங்களின் பொருளாதாரம் 2021-22 இல் மீண்டும் எழுச்சி பெற்றது மற்றும் அவற்றின் கொரோனாவுக்கு முந்தைய (2019-20) நிலைகளை தாண்டியது.
இதையும் படியுங்கள்: பில்கிஸ் பானோ வழக்கின் குற்றவாளிகள் 11 பேர் விடுதலை; ஆகஸ்ட் 22ல் விவாதிக்கிறது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
இந்த 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்: ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், தெலுங்கானா, டெல்லி, ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, திரிபுரா, சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், மேகாலயா, ஜார்கண்ட், தமிழ்நாடு, ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் புதுச்சேரி .
ஆகஸ்ட் 1, 2022 நிலவரப்படி, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான GSDP (2011-12 நிலையான விலையில்) புள்ளிவிவரங்கள் கிடைக்கின்றன. இதில் கேரளா மற்றும் உத்தரபிரதேசம் மட்டும் விதிவிலக்கு; 2021-22ல், அந்த மாநிலங்களின் GSDP கொரோனாவுக்கு முந்தைய நிலைகளை விடக் குறைவாகவே இருந்தது.
இந்த 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், ஆந்திரா 11.43 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, அதே சமயம் புதுச்சேரி மிகக் குறைவான (3.31 சதவீதம்) வளர்ச்சியைப் பதிவு உள்ளது. ஆந்திராவைத் தவிர, ராஜஸ்தான் (11.04 சதவீதம்), பீகார் (10.98 சதவீதம்), தெலங்கானா (10.88), டெல்லி (10.23 சதவீதம்), ஒடிசா (10.19 சதவீதம்) மற்றும் மத்தியப் பிரதேசம் (10.12 சதவீதம்) ஆகிய மற்ற ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 2021-22ல் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதங்கள் பதிவாகியுள்ளன. ஹரியானா (9.80 சதவீதம்) மற்றும் கர்நாடகா (9.47 சதவீதம்) ஆகிய மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் கடந்த நிதியாண்டில் இரட்டை இலக்கத்தை நெருங்கியது.
மீதமுள்ள திரிபுரா, சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், மேகாலயா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு, ஜம்மு & காஷ்மீர், கேரளா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொருளாதாரம் 2021-22 இல் 4.24 சதவீதம் முதல் 8.69 சதவீதம் வரை வளர்ச்சியடைந்தது. பெரிய மாநிலங்களில், உத்தரப் பிரதேசம் 2021-22 இல் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதமான 4.24 சதவீதத்தைப் பதிவு செய்தது.
சில மாநிலங்களின் GSDP இல் கூர்மையான அதிகரிப்புக்கு அடிப்படை விளைவு காரணமாக இருந்தாலும், பொதுவான போக்கு தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மீட்சியை பிரதிபலிக்கிறது. 2021-22ல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2020-21ல் 6.6 சதவீத சுருக்கத்திற்கு எதிராக 8.7 சதவீதமாக விரிவடைந்தது.
2020-21ல், மணிப்பூர் (3.19 சதவீதம்), மேற்கு வங்கம் (1.06 சதவீதம்), தமிழ்நாடு (0.14 சதவீதம்) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (0.08 சதவீதம்) தவிர அனைத்து மாநிலங்களின் GSDP முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.
அருணாச்சல பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, மேற்கு வங்காளம், அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் சண்டிகர் ஆகிய ஒரு டஜன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2021-22 GSDP புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. அந்தந்த மாநில அரசாங்கங்களின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநரகம் அறிக்கை செய்தபடி GSDP புள்ளிவிவரங்களை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தொகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil