எல்லையில் உள்ள இந்திய துருப்புகளைப் பற்றிய ரகசிய தகவல்களை சீன உளவுத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியதாக ராஜதந்திர விவகார ஆய்வாளரும் எழுத்தாளருமான ராஜீவ் சர்மா சிறப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
பாதுகாப்பு ரகசியங்கள் சட்டத்தின் படி, மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். சீன உளவுத்துறைக்கு முக்கிய தகவல்களை அனுப்புவதற்காக ராஜீவ் சர்மாவுக்கு ஹவாலா பணம் மூலமாக ஒரு பெரும் தொகையை அளித்ததாக சீனாவைச் சேர்ந்த 30 வயது பெண் மற்றும் அவருடன் நேபாளத்தைச் சேர்ந்த நபரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
ராஜீவ் சர்மாவுக்கு பணத்தை அனுப்புவதற்கு ஷெல் நிறுவனங்கள் வெளிநாடுகளில் அமைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு பிரிவு துணை கமிஷனர், சஞ்சீவ் குமார் யாதவ், செப்டம்பர் 13ம் தேதி பாதுகாப்பு ரகசிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு அடுத்த நாள் ராஜீவ் சர்மா கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.
ராஜீவ் சர்மாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு மடிகணினி, பாதுகாப்புத்துறை தொடர்பான சில ரகசிய ஆவணங்கள் மற்றும் பிற குற்றச்சாட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள சீனாவை சேர்ந்த பெண் குயிங் ஷி சீனாவின் நிறுவனத்தின் இந்திய கிளை நிறுவனத்தை நடத்தி வந்தார் என்றும் அதில் சர்மாவின் ஆட்கள் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ராஜீவ் சர்மா பகிர்ந்ததாக கூறப்படும், ஆவணங்களின் தன்மை குறித்த அனைத்து கேள்விகளையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக தி சண்டே எக்ஸ்பிரஸிடம் கூறிய விசாரணை அதிகாரி, “ராஜீவ் சர்மாவின் மின்னஞ்சலில் இருந்து இந்தியா – சீனா எல்லையில் ராணுவ நடவடிக்கைகள் குறித்த தகவலகள், வரைபடங்கள், பிடிஎஃப் ஆவணம், மற்றும் பிற ஆவணங்கள் கைப்பற்றியுள்ளோம். மேலும், ராஜீவ் சர்மா இந்தியா – மியான்மர் எல்லை நிலைமை பற்றிய ரகசிய தகல்வகளையும் வைத்திருந்தார். நாங்கள் ஆதாரங்களை கண்டுபிடிப்பதற்காக அனைத்து மின்னஞ்சல்களையும் ஆவணங்களையும் சோதனை செய்து வருகிறோம்.” என்று கூறினார்.
ராஜீ சர்மாவின் வழக்கறிஞர் டாக்டர் அதிஷ் அகர்வாலா சர்மாவுக்கு எதிரான குற்றாட்டுகளைப் பற்றி கேள்வி எழுப்பினார். அகர்வாலா கூறுகையில், “அவர் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளர்… எந்த பத்திரிகையாளரையும் வெளிநாட்டு செய்தி நிறுவனங்களால் பணியமர்த்த முடியும்… அவர் குளோபல் டைம்ஸிற்காக எழுதிக்கொண்டிருந்தார்… அது ஒரு அங்கீகாரம் பெற்ற செய்தி நிறுவனம் ” என்று கூறினார்.
மேலும், செப்டம்பர் 14ம் தேதி இரவு சாலையில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தபோது ராஜீவ் சர்மா கைது செய்யப்பட்டார் என்று அகர்வாலா கூறினார். பின்னர், “காவல்துறையினர் அவருடன் அவரது வீட்டிற்குச் சென்றனர். அவர்களில் 20 பேர், அதிகாலை 3 மணி வரை அவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். சர்மாவின் மனைவி கூறுகையில், அவர்கள் எந்தவொரு முக்கியமான பொருளையும் கண்டுபிடிக்கவில்லை. அவர் அத்தகைய எந்தவொரு செயலிலும் ஈடுபடவில்லை என்றும் எந்தவொரு இரகசிய ஆவணங்களையும் வாங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில், டி.சி.பி யாதவ் கூறுகையில், “2010-2014 காலப்பகுதியில், ராஜீவ் சர்மா குளோபல் டைம்ஸுக்கு வாராந்திர கட்டுரையை எழுதினார். இது சீன அரசாங்கத்தின் ஆதரவு நிறுவனமாக பரவலாக அறியப்படுகிறது. அந்த வரிசையில் கவனித்ததில், சீனாவின் குன்மிங் நகரத்தைச் சேர்ந்த மைக்கேல் என்ற சீன உளவுத்துறை முகவர் தனது லிங்க்ட்இன் கணக்கு மூலம் ச்ர்மாவைத் தொடர்புகொண்டு சீன ஊடக நிறுவனத்துடன் நேர்காணலுக்கு குன்மிங்கிற்கு அழைத்தார். ”எ ந்று கூறினார்.
மேலும், இது குறித்து கேள்வி எழுப்பியபோது சர்மா ஒப்புக் கொண்டதாகக் கூறிய டி.சி.பி யாதவ் கூறுகையில், “இந்தியா-சீனா உறவுகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய உள்ளீடுகளை வழங்குமாறு மைக்கேலும் அவரது ஜூனியர் எக்ஸோவும் அவரிடம் கேட்டார்கள். 2016 மற்றும் 2018 ஆண்டுகளுக்கு இடையில் சர்மா இருவருடனும் தொடர்பு கொண்டிருந்தார். டோக்லாம் உள்ளிட்ட பூட்டான்-சிக்கிம்-சீனா முத்தரப்பு சந்திப்பில் இந்தியாவின் நடவடிக்கை மற்றும் இந்தியா-மியான்மர் இராணுவ ஒத்துழைப்பு முறை, மற்றும் இந்தியா-சீனா எல்லை பிரச்சினை போன்ற தகவல்களை வழங்குமாறு அவர்கள் கேட்டுள்ளார்கள். மேலும் அவர் லாவோஸ் மற்றும் மாலத்தீவில் மைக்கேல் மற்றும் எக்ஸோவுடன் சந்தித்த்துள்ளார்.” என்று கூறினார்.
ஜனவரி 2019 இல், சர்மா குன்மிங்கைச் சேர்ந்த ஜார்ஜ் என்ற மற்றொரு நபருடன் தொடர்பு கொண்டதாக போலீசார் கூறுகின்றனர். ஜார்ஜ் ஒரு சீன ஊடக நிறுவனத்தின் பொது மேலாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார் என்று போலீசார் கூறுகின்றனர். மேலும், “சர்மா காத்மாண்டு வழியாக குன்மிங்கிற்குச் சென்று ஜார்ஜைச் சந்தித்தார்… இந்த சந்திப்பின் போது, தலாய் லாமா தொடர்பான பிரச்சினைகள் குறித்து எழுதுமாறு சர்மாவை ஜார்ஜ் கேட்டுள்ளார். இதற்காக அவருக்கு ஒரு கட்டுரைக்கு அல்லது ஒரு தகவலுக்கு 500 அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது… தில்லியின் மகிபல்பூரை மையமாகக் கொண்ட அவர்களுடைய துணை நிறுவனத்தின் மூலம் பணம் அனுப்புவார்கள் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த துணை நிறுவனம் குயிங் ஷியால் இயக்கப்படுகிறது என்று போலீசார் தெரிவித்தனர். குயிங் 2013-15 முதல் ஜாமியா ஹம்டார்ட் நர்சிங் கல்லூரியில் எம்.எஸ்சி படித்தார் என்று கல்லூரி வட்டாரம் தெரிவித்தது. கைது செய்யப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த ஷெர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது குறித்து டெல்லி காவல்துறை கூறுகையில், “சீன நாட்டைச் சேர்ந்த 2 பேர் – ஜாங் சாங் மற்றும் அவரது மனைவி சாங்-லி-லியா – சூரஜ் மற்றும் உஷா என்ற போலி பெயர்களில் MZ பார்மசி மற்றும் MZ மால்ஸ் நிறுவனங்களை நடத்தி வந்தனர். அவர்கள் இருவரும் தற்போது சீனாவில் உள்ளனர். அவர்கள் சார்பாக, MZ பார்மசியின் இயக்குநர்களான கிங் மற்றும் ஷெர் சிங் இருவரும் வணிகத்தை நடத்தி வந்தனர். ” என்று கூறுகின்றனர்.
டி.சி.பி யாதவ் கூறுகையில், “ஜனவரி 2019 முதல் 2020 செப்டம்பர் வரை சர்மா சுமார் 10 தவணைகளில் ஜார்ஜிடமிருந்து ரூ.30 லட்சத்துக்கு மேல் பெற்றுள்ளார். சர்மா மலேசியாவிலும் குன்மிங்கிலும் ஜார்ஜுடன் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.” என்றுகூறினார்.
“மீட்கப்பட்ட ரகசிய ஆவணங்களை தனது ஆட்களுக்கு அனுப்பப்போவதாக சர்மா கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், “கடந்த காலத்திலும், அவர் பல ஆவணங்களை அனுப்பியுள்ளார். … அதற்காக அழகான அவர் ஒரு பெரிய தொகையை பெற்றார்.”என்று போலீசார் தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன்பு சர்மாவைப் பற்றியும், சட்டவிரோதமாக வெஸ்டர்ன் யூனியன் பணப் பரிமாற்றங்கள் மூலமாக அவர் தனது ஆட்களிடம் இருந்து நிதியைப் பெற்றது பற்றியும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான முக்கியமான தகவல்களைத் தெரிவிப்பதைப் பற்றியும் ஒரு புலனாய்வு அமைப்பினரால் தகவல் தெரிவிக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
முன்னதாக யுனைடெட் நியூஸ் ஆஃப் இந்தியா, தி ட்ரிப்யூன் மற்றும் சாகல் டைம்ஸ் ஆகியவற்றில் பணிபுரிந்த ராஜீவ் சர்மா சமீபத்தில் குளோபல் டைம்ஸுக்கு ‘பெய்ஜிங்கிற்கான ஒரு சமரச சாலை வரைபடம் மற்றும் புதுடெல்லி இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அவர் 11,000 க்கும் அதிகமான ஃபாலோவர்களுடன் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். மேலும், 7 புத்தகங்களை எழுதியதாகக் கூறுகிறார்.
சர்மா உறுப்பினராக இருக்கும் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா (பிசிஐ) சர்மா கைது செய்ததை விமர்சித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது அவரை ஒரு சுதந்திரமான பத்திரிகையாளர் என்று குறிப்பிட்டுள்ளது.
சர்மா 6 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். அவர் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சீனாவுக்கு அனுப்பினார் என்பது நம்பும்படியாக இல்லை. அவர் இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரங்களை எழுதினார். அதனால், அரசாங்க தளத்தில் உள்ள இணையத்தில் வழக்கமாக அதிகப்படியான வகைப்படுத்தப்பட்ட தகவல்களை அணுகியிருக்கலாம்… காவல்துறையின் அறிக்கையின் அடிப்படையில்… தெளிவற்ற அல்லது கேள்விக்குரிய கருத்துகளால் ஈர்க்கப்பட்டு போலீஸ் அராஜக நடவடிக்கை எடுத்துள்ளது என்று சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.
ராஜீவ் சர்மா கைது செய்யப்பட்ட நிலையில், பிதாம்புராவில் உள்ள சர்மாவின் வீடு சனிக்கிழமை பூட்டியே இருந்தது.