மகாராஷ்டிரா அரசாங்கத்தை கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணிக்கு எதிரான தனது முதல் சுற்றில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றார்.
சபாநாயகர் தேர்தலில் பாஜக எம்எல்ஏ ராகுல் நார்வேகா் தோ்ந்தெடுக்கப்பட்டார்.
நர்வேக்கர் 164 வாக்குகளும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் போட்டி வேட்பாளர் ராஜன் சால்வி 107 வாக்குகளும் பெற்றனர். தொடர்ந்து, அரசு திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து மாநிலத்தில் புதிய அரசை அமைத்தன. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
இதைத் தொடர்ந்து பேரவையில் 4-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இந்நிலையில், மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை:3) தொடங்கியது.
சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியதும் பேரவைத் தலைவர் தேர்வு நடந்தது. இதில் பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
எஸ்.பி மற்றும் எம்.ஐ.எம் உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. தவிர, சிறையில் உள்ள நவாப் மாலிக், அனில் தேஷ்முக் உட்பட ஏழு என்சிபி எம்எல்ஏக்கள், பாஜக மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த தலா இரண்டு உறுப்பினர்கள் உள்பட ஒட்டுமொத்தமாக 12 எம்எல்ஏக்கள் நேற்று பேரவைக்கு வரவில்லை.
இதனிடையே, சட்டப்பேரவையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், இந்திய அரசியலில் இதற்கு முன்பு எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆளும் அரசில் இணைவது வாடிக்கையாக இருந்தது. முதல்முறையாக மகாராஷ்டிராவில் ஆளும் அரசில் இருந்து எதிர்க்கட்சிக்கு தலைவர்கள் மாறியுள்ளனர்.எனக்கு ஆதரவு அளிக்கக் கோரி எந்தவொரு எம்எல்ஏவையும் நிர்ப்பந்திக்கவில்லை. நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை. விதியின்காரணமாக அந்த பதவியில் அமர்ந்துள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த பிரதமர் மோடியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன் என்று கூறினார்.
தொடர்ந்து, சிறப்பு கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.
பேரவைத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணிக்கு 164 வாக்குகள் கிடைத்தன. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 144 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஷிண்டே தலைமையிலான அரசு எளிதில் வெற்றி பெறும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பேரவைத் தலைவா் தோ்தலில் நார்வேகருக்கு வாக்களிக்குமாறு முதல்வா் ஷிண்டே தரப்பிலும், அவருக்கு எதிராக வாக்களிக்குமாறு முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தரப்பிலும், சிவசேனை எம்எல்ஏ-க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஷிண்டே ஆதரவு சிவசேனை எம்எல்ஏ-க்கள் நார்வேகருக்கும், உத்தவ் தாக்கரே ஆதரவு 16 எம்எல்ஏ-க்கள் சால்விக்கும் வாக்களித்தனா். அதையடுத்து, உத்தவ் தாக்கரே தரப்பினா், கட்சி கொறடா உத்தரவுக்கு மாறாகச் செயல்பட்ட 39 எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பேரவை துணைத் தலைவா் நா்ஹரி ஜிர்வாலிடம் புகாரளித்தனா். அந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜிர்வால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதல்வா் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏ-க்களை பதவிநீக்கம் செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“