ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என கருதப்படும் நிலையில், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமானவர்கள் என கருதப்படும் 20 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
ராஜினாமா செய்த அனைவரும்,யூனியன் பிரதேசத்தில் கட்சித் தலைமையை மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதவி ராஜிமானா செய்வதர்கள் பட்டியல்
முன்னாள் அமைச்சர்கள் ஜிஎம் சரூரி, விகார் ரசூல், டாக்டர் மனோகர் லால் சர்மா, முன்னாள் எம்எல்ஏக்கள் ஜுகல் கிஷோர் சர்மா, குலாம் நபி மோங்கா, நரேஷ் குப்தா, முகமது அமின் பட், சுபாஷ் குப்தா ஆகும்.
மேலும், பிரதேச காங்கிரஸ் துணைத் தலைவர் அன்வர் பட், குல்காம் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் உறுப்பினரும் முன்னாள் மாவட்டத் தலைவருமான அன்யதுல்லா ராதர், காங்கிரஸின் புத்காம் மாவட்டத் தலைவர் ஜாஹித் ஹாசன் ஜான், முதல்வரின் முன்னாள் அரசியல் ஆலோசகர் மன்சூர் அகமது கனாய், ஏஐசிசி உறுப்பினர் பொறியாளர் மரூப், கட்சியின் எஸ்டி செல் துணைத் தலைவர் சவுத்ரி சோஹத் அலி, கார்ப்பரேட்டர் கவுரவ் சோப்ரா, மாவட்ட பொதுச் செயலர் அஷ்வானி சர்மா உள்ளிட்டோர் ராஜினாமா செய்துள்ளனர்.
20 நாள்களுக்கு முன்பு கட்சி தலைமைக்கு கடிதம்
இதுகுறித்து ஜி என் மோங்கா, விகார் ரசூல் ஆகியோரை தொடர்பு கொண்டபோது, ஜம்மு காஷ்மீரில் தலைமையை மாற்றக் கோரி கட்சித் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக உறுதிப்படுத்தினர்.
பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஜி.ஏ.மிர் பெயரைக் குறிப்பிடாமல், விகார் ரசூல் கூறுகையில், " மூன்று வருட காலத்திற்கு அவர் நியமிக்கப்படுகிறார் என்று எங்களிடம் கூறப்பட்டது. ஆனால், தற்போது ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. கட்சி தலைமையை மற்றாவிட்டால், நாங்கள் கட்சியில் எந்த பதவியிலும் வகிக்க மாட்டோம் என கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தோம்" என்றார். சுமார் 20 நாள்களுக்கு முன்பு, கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ராஜினாமா கடிதம் காங்கிரஸ் தலைவர் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தின் நகல் ராகுல் காந்திக்கும், ஜம்மு காஷ்மீர் பொறுப்பு செயலாளர் ரஜினி பாட்டீலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
200க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகள் ராஜினாமா
ராஜினாமா செய்த தலைவர்களின் கூற்றுப்படி, "ஜிஏ மிர் தலைமையில் காங்கிரஸ் பேரழிவு நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், இதுவரை 200க்கும் மேற்பட்ட மூத்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், பிசிசி நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், ஏஐசிசி உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்து மற்ற கட்சிகளில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்டங்களின் சிட்டிங் எம்எல்ஏக்கள் ஆலோசனையின்றி கட்சிப் பதவிகள் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டினர்.
நாடாளுமன்றம், DDC, BDC, பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகள் உட்பட அனைத்து தேர்தல்களிலும் ஒன்றன்பின் ஒன்றாக காங்கிரஸ் தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, ஜிஏ மிர் நாடாளுமன்றத்தில் தேர்தலில் தோல்வியடைந்ததையும், அவரது மகன் DDC தேர்தலில் அவரது சொந்த தொகுதியில் PAGD வேட்பாளராக களமிறங்கிய போதும் தோல்வியடைந்ததை நினைவுப்படுத்தனர்.
கண்டுகொள்ளாத தலைமை
இதுகுறித்து கடந்த ஒரு வருடமாக கட்சித் தலைமையிடம் எடுத்துரைத்தோம். ஆகஸ்ட் 2021இல் ராகுல் காந்தி ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு வந்தப்போது தனிப்பட்ட முறையிலும் கோரிக்கை வைத்தோம். அவர்கள் பொருட்படுத்தவில்லை. இந்த விஷயம் ரஜினி பாட்டீலின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அவரும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
கட்சித் தலைமையால் பின்பற்றப்பட்ட இந்த விரோதப் போக்கைக் கருத்தில் கொண்டு, நாங்கள் சுமந்துவரும் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.தயவு செய்து எங்களது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், பிசிசியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ராஜினாமா செய்தவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. அவர்களில் ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்பு கதுவா மாவட்டத்தில் ரஜினி பாட்டீல் நடத்திய கட்சி நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக கட்சி தலைமை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டது.
இதற்கு முன்னரும் இதேபோன்ற கடிதத்தை கட்சித் தலைவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் எழுதினர். கட்சி செயல்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளில் அலட்சியம் காட்டியதற்காக அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என கருதி, தற்போது மீண்டும் அந்தக் கடிதத்தை பொதுமக்கள் மத்தியில் பரப்பியுள்ளதாக குற்றச்சாட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.