சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) தற்போது மாதந்தோறும் 160 மில்லியன் கோவிஷீல்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்துவரும் நிலையில், அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் மாதந்தோறும் 200 மில்லியனாக (20 கோடி) உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அதன் சிஇஓ ஆதர் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், mRNA தடுப்பூசிகளைத் தயாரிக்க பிரத்யேக வசதியை உருவாக்கிவருவதாகவும், அதன் பணிகள் முழுமையாக முடிவடைய இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றார்.
இந்தப் புதிய ஆராய்ச்சி கூடத்தின் உள்கட்டமைப்பை சீரம் நிறுவனமும், பயோகான் பயாலஜிக்ஸ் நிறுவனமும் பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களும் சமீபத்தில் தான் நீண்டகால ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
சீரம் சிஇஓ ஆதர் மற்றும் பயோகான் சிஇஓ கிரன் மசும்தார் ஷா ஆகிய இருவரும் கூட்டணி குறித்து அறிவிப்பதற்காக நேற்று மெய்நிகர் ஊடக மாநாட்டில் உரையாற்றினார்கள்.
கூட்டணியின் படி, பிபிஎல் நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் 100 மில்லியன் தடுப்பூசிகளும், உலகளாவிய சந்தையில் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிகளின் வணிகமயமாக்கல் உரிமைகளும் கிடைக்கப்பெறும். அதே போல, சீரம் நிறுவனத்திற்கு சுமார் $ 4.9 பில்லியன் மதிப்பிலான BBL இன் சுமார் 15 சதவீத பங்குகள் கிடைக்கும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து ஷா பேசுகையில், "இந்தக் கூட்டணி பயோலாஜிக்ஸ் மற்றும் தடுப்பூசி உற்பத்தியில் பலத்தை அதிகப்படுத்தித் தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கும். தடுப்பூசி தயாரிப்பது மட்டுமின்றி, புதிய கூட்டணி மூலம் டெங்கு , HIV போன்ற பல தொற்று நோய்களை அன்டிபாடிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய ஆதர், " புதிய mRNA ஆராய்ச்சி கூடம் மூலம் குறைந்தபட்சம் 100 மில்லியன் டோஸ்களை தயாரிக்க முடியும். ஆனால், அவை உருவாக இரண்டு ஆண்டுகள் ஆகும். அதுவரை, பிபிஎல் ஆராய்ச்சி செய்து தயாரிப்புகளைத் தரும். அதை நாங்கள் உற்பத்தி செய்து, லாபத்தைப் பகிர்ந்துகொள்ள உள்ளோம்.
2020 இல், கடினமான முடிவு ஒன்றை எடுக்க வேண்டியிருந்தது. ஆம், கோவிஷீல்டு தடுப்பூசியை விரைவாகத் தயாரிக்கும் முயற்சிக்காக, அச்சமயம் செய்துகொண்டிருந்த பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருந்தது.
தற்போது, தினமும் 160 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரித்து வருகிறோம். அக்டோபர் மாதம் முதல் இதனை 200 மில்லியன் டோஸாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இந்த உற்பத்தி அதிகரிப்பானது, உலகளாவிய மூலப்பொருள் விநியோகத்திலிருந்து SII பெறும் மூலப்பொருளின் அடிப்படையில் தான் திட்டமிடப்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் விநியோகம் மார்ச் மாதத்திலிருந்து முன்னேற்றம் அடைந்துள்ளது.
தடுப்பூசி ஏற்றுமதி
தற்போது, தடுப்பூசிகள் எந்தளவு இந்தியாவில் விநியோகித்து வருகிறோம் என்பதை கணக்கிட்டு வருகிறோம். அதை கணக்கிட்டு, கூடுதலாகத் தடுப்பூசிகளைக் கையிருப்பு வைத்திருக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம், ஓரிரு மாதங்களில் தடுப்பூசி ஏற்றுமதியில் கூடுதல் தளர்வுகள் வரலாம். ஆனால், வரும் காலத்தில் கொரோனா மூன்றாம் மற்றும் நான்காம் அலையைக் கருத்தில் கொண்டே தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் போது போதுமான அளவு தடுப்பூசி இல்லாததால் தக்க பாடம் கற்றுக்கொண்டோம். மீண்டும் அந்த சூழ்நிலையில் இருக்க விரும்பவில்லை, அதனால்தான் இந்திய அரசு தடுப்பூசி பங்குகளை நிர்வகிப்பதில் எச்சரிக்கையாக உள்ளது.
பூஸ்டர் டோஸ்
கோவிஷீல்டிற்கு மூன்றாவது டோஸ் தேவை என்று சொல்ல இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. ஒருசிலர் தனிப்பட்ட விருப்பத்தில் வேணால் எடுத்திருக்கலாம். நாங்கள் அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கவில்லை. கொரோனா டெல்டா வேரியண்ட் எதிராக கோவிஷீல்டு எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்ந்து,DCGI மற்றும் ICMR முடிவு செய்வார்கள். சில நாடுகளில் தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தியும் அன்டிபாடி குறைந்துள்ளதாகத் தகவல் கிடைக்கின்றன. அங்கு மூன்றாவது டோஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய இலக்கு அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். பின்னர் மூன்றாவது டோஸை ஒரு பூஸ்டராக தான் பார்க்க வேண்டும். ஏனெனில் சில நாடுகளில் உள்ள மக்களுக்கு இரண்டு டோஸ் கிடைக்காத போது, மூன்றாவது டோஸை வழங்குவது நியாயமற்றது. வளரும் நாடுகளில் 2 முதல் 3 சதவிகிதம் மட்டுமே தடுப்பூசிகளைப் பெற்றுள்ள நிலையில், வளர்ந்த நாடுகளில் இது 40-50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. வரும் காலத்தில், பூஸ்டர் டோஸ் அவசியம் வரும் பட்சத்தில், அது செயல்பாட்டுக்கு வரும்.
தற்போது நாங்கள் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கவுள்ளோம். அதே போல, பாரத் பயோடேக் நிறுவனமும் ஜைடஸ் நிறுவனத்தின் உதவியுடன் உற்பத்தியை அதிகரித்துள்ளது. இதன் மூலம், மக்கள் தொகையின் பெரும் பகுதியை நாம் அடைந்துவிடலாம். வரும் காலத்தில் அடுத்த அலை வந்தாலும், அதனை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.