நாட்டின் 21 மாநிலங்களை ஆளுகிறது பாஜக!

தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாட்டில் வசிக்கும் 849,825,030 எண்ணிக்கை கொண்ட மக்கள் வசிக்கும் மாநிலங்களை ஆட்சி செய்கிறது

நடந்து முடிந்த வடகிழக்கு மாநில தேர்தலில் திரிபுராவில் பாஜகவும், நாகலாந்தில் பாஜக + என்பிஎஃப் கூட்டணியும் வெற்றிபெற்றுள்ளது. மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பாஜக வீழ்த்தியது. திரிபுராவை கம்யூனிஸ்ட் கட்சி இழந்தது மட்டுமல்லாமல், அங்கு காங்கிரஸ் பூஜ்ய நிலைக்கு தள்ளப்பட்டது. அதேபோல், நாகாலாந்திலும் காங்கிரஸ் ஒரு தொகுதியை கூட வெல்லவில்லை.

இந்த வெற்றிகளின் மூலம் பாஜக 21 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. இதன் மூலம், நாட்டின் 70 சதவிகித மக்கள் வாழும் பகுதிகளை பாஜக ஆள்கிறது. இது வரலாற்று சாதனையாகும்.

இதற்கு முன்னதாக, 1993ம் ஆண்டு இந்தியாவில் 26 மாநிலங்கள் இருந்த போது, 16 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. இதில், 15 மாநிலங்களில் காங்கிரஸ் தன்னிச்சையாக ஆட்சி செய்தது. ஒரு இடத்தில் மட்டும் கூட்டணி கட்சி துணையோடு ஆட்சி செய்தது. அதன்பிறகு, இப்போது 21 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்கிறது.

2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற போது, பாஜக மொத்தம் 7 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்தது. காங்கிரஸ் அப்போது 13 மாநிலங்களை ஆண்டுக் கொண்டிருந்தது. இப்போது காங்கிரஸின் ஆட்சி வெறும் 4 மாநிலங்களில் மட்டுமே. பஞ்சாப், கர்நாடகா, மிசோரம் மற்றும் புதுச்சேரி. ஒருவேளை, மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் எண்ணிக்கை ஐந்தாக உயரும். ஆனால், அதற்கும் பாஜக முட்டுக் கட்டைப் போட கடுமையாக முயற்சித்து வருகிறது.

தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாட்டில் வசிக்கும் 849,825,030 எண்ணிக்கை கொண்ட மக்கள் வசிக்கும் மாநிலங்களை ஆட்சி செய்கிறது. இது 70.18 சதவிகிதம் ஆகும். காங்கிரஸ் ஆட்சி செய்யும் 91,183,794 மக்கள் தொகை கொண்ட எண்ணிக்கையை விட இது 9 சதவிகிதம் அதிகமாகும்.

நாட்டின் மிகப்பெரிய 10 மாநிலங்களில் 7-ஐ தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்கிறது. உத்தர பிரதேசம் (199 மில்லியன்), மகாராஷ்டிரா (112 மில்லியன்), பீகார் (104 மில்லியன்), ஆந்திர பிரதேசம் (84 மில்லியன்), மத்தியப் பிரதேசம் (72 மில்லியன்), ராஜஸ்தான் (68 மில்லியன்) மற்றும் குஜராத் (60 மில்லியன்). மற்ற 3 மாநிலங்களில் மேற்கு வங்கத்தை திரினாமூல் காங்கிரஸ் கட்சியும், கர்நாடகத்தை காங்கிரசும் ஆள்கின்றன. தமிழகத்தை அஇஅதிமுக ஆள்கிறது.

மேலும், மெக்கென்சி & கோ புள்ளி விவரத்தின் படி, அடுத்த பத்தாண்டில் இந்தியாவில் உள்ள எட்டு மாநிலங்கள் (குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ் நாடு, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தர்கண்ட்) தான் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது ஆறு மாநிலங்களை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்கிறது. காங்கிரஸ் பூஜ்யத்தில் உள்ளது. ஆனால், இதில் தமிழகத்தில் மட்டும் தான் பாஜகவால் ஒரு துரும்பை கூட அசைக்க முடியவில்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close