மருத்துவரின் மரணம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகவும் கூறிய முதலமைச்சர் பினராயி விஜயன், பணியில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறியுள்ளார்.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், புதன்கிழமை 23 வயதான மருத்துவர் ஒருவர் 42 வயது பள்ளி ஆசிரியரால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். அவர் முன்பு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைக்காக காவல்துறையினரால் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.
டாக்டர் வந்தனா தாஸ் அந்த நபருடைய காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக அறைக்கு அழைத்துச் சென்ற பிறகு, அவர் டாக்டரை பலமுறை கத்தியால் குத்தினார்.
போலீஸார் கூறியபடி, 42 வயதான எஸ். சந்தீப் குடிபோதையில் இருந்தார், திடீரென்று வன்முறையில் ஈடுபட்டார், மருத்துவமனை படுக்கையில் இருந்து குதித்து, கத்தரிக்கோலைப் பிடித்து, ஒரு போலீஸ்காரர் உட்பட பலரைக் குத்தினார்.
சம்பவம் நடந்த கொட்டாரக்கரா அரசு வட்டார மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்த டாக்டர் வந்தனா, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நடந்த உடனேயே, வந்தனாவுக்கு நீதி கோரி அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு செய்து மாநிலம் முழுவதும் தெருக்களில் போராட்டத்தில் இறங்கினர். சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் ஆகியவை வியாழக்கிழமை அவசர மருத்துவத் தேவைகளைத் தவிர, மாநிலத்தில் மருத்துவப் பணியைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
வந்தனாவின் மரணம் கேரள உயர் நீதிமன்றத்திடம் இருந்து கடுமையான எதிர்வினைகளை பெற்றுள்ளது. இது போன்ற ஒரு சம்பவம் இளம் மருத்துவர்கள் இந்த அமைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கையை சிதைத்துவிடும் என்று கூறியது.
போலீஸார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் புதன்கிழமை அதிகாலை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சிலர் தன்னைத் தாக்குவதாகக் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூயப்பள்ளி காவல் நிலைய அதிகாரிகள் சந்தீப்பை அழைக்க முயன்றனர். ஆனால், அவரை அணுக முடியவில்லை. அதிகாலை 4 மணியளவில் சந்தீப் மீண்டும் தங்களுக்கு போன் செய்ததாகவும், தான் தாக்கப்படுவதாக மீண்டும் கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அப்போது பூயப்பள்ளியில் உள்ள வேறொருவரின் வீட்டின் அருகே அவரை போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது, அவர் குடிபோதையில் வழக்கத்திற்கு மாறான முறையில் பேசி, நடந்து கொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அவரது ஒரு காலில் காயம் ஏற்பட்டிருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதிகாலை 4.30 மணியளவில் அவர் கொட்டாரக்கரா தாலுக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஏடிஜிபி (சட்டம் ஒழுங்கு) எம்.ஆர். அஜித் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சந்தீப் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல.” என்று கூறினார்.
“சந்தீப் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது சாதாரணமாக நடந்துகொண்டார். பரிசோதனைக்குப் பிறகு, அவர் காயத்திற்கு கட்டு கட்டும் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் முதலில் காயத்திற்கு கட்டு கட்டும் மேசையில் வன்முறையில் ஈடுபட்டார். படுக்கையில் இருந்து குதித்த அவர் பினு என்ற உறவினரை எட்டி உதைத்தார். அறையிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து ஒரு காவலரை (போலீஸ் குழுவுடன் வந்தவர்) கத்தியால் குத்தினார். அப்போது சந்தீப் மருத்துவமனையில் பணியில் இருந்த ஒரு போலீஸ்காரர் மற்றும் மற்றொரு நபருக்கு எதிராக திரும்பினார்” என்று ஏ.டி.ஜி.பி கூறினார்.
“இதனால், கட்டு கட்டும் அறையில் இருந்த அனைவரும் வெளியே வந்துவிட டாக்டர் வந்தனாவால் வெளியே வர முடியவில்லை. பின்னர் சந்தீப் டாக்டருக்கு எதிராக திரும்பி அவரை பலமுறை கத்தியால் குத்தினார். குற்றம் சாட்டப்பட்ட நபர் மதுவுக்கு அடிமையானவர்,” என்று ஏ.டி.ஜி.பி கூறினார்.
சந்தீப் கொல்லத்தில் உள்ள நெடும்பனாவில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். பள்ளியின் தலைமையாசிரியை சூசன் கூறும்போது, “அவர் 2021 டிசம்பரில் சேர்ந்தார். உண்மையில், அவர் வேறு ஒரு அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்தவர். ஆனால், அந்தப் பள்ளியில் போதுமான மாணவர்கள் இல்லாததால் பாதுகாக்கப்பட்ட ஆசிரியரானார். அவர் போதைக்கு அடிமையானவர் என்பதைக் காட்டும் எந்தச் சம்பவத்தையும் நாங்கள் சந்திக்கவில்லை… அவருடைய நடத்தை குறித்து எங்களுக்கு எந்தப் புகாரும் இல்லை.” என்று தெரிவித்தனர்.
இருப்பினும், சந்தீப்புக்கு குடிபோதையில் பிரச்னை செய்து வன்முறையில் ஈடுபடும் பழக்கம் இருந்ததாக அவரது பக்கத்து வீட்டு ஸ்ரீகுமார் கூறினார். செவ்வாய்க்கிழமை இரவு அவர் குடிபோதையில் தனது தாயிடம் தகராறு செய்ததாக ஸ்ரீகுமார் தெரிவித்தார்.
கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் நகரைச் சேர்ந்த வந்தனா, தொழிலதிபர் கேஜி மோகன்தாஸ் மற்றும் வசந்தகுமாரி ஆகியோரின் ஒரே மகள். கொல்லத்தில் உள்ள அஜீசியா மருத்துவ அறிவியல் கழகத்தில் எம்.பி.பி.எஸ் படித்தவர். அவரது எம்.பி.பி.எஸ் தேர்வு முடிந்தவுடன், குடும்பத்தினர் தங்கள் வீட்டின் வாயிலில் ‘டாக்டர் வந்தனா தாஸ் எம்.பி.பி.எஸ்’ என்ற பெயர் பலகையை பெருமையுடன் வைத்தனர்.
அவரது எம்.பி.பி.எஸ் தேர்வுக்குப் பிறகு, அவர் கிராமப்புற மருத்துவமனையில் 84 நாட்கள் சேவையை முடிக்க வேண்டியிருந்தது. இதற்காக, மார்ச் மாதம் முதல் கொட்டாரக்கரா மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கினார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மஞ்சூர் ஊராட்சி உறுப்பினர் டோமி கருகுளம், “வந்தனாவை நினைத்து நாங்கள் அனைவரும் பெருமைப்பட்டோம். படிப்பில் சிறந்து விளங்கினார். அவரது மறைவு ஒட்டுமொத்த கிராமத்துக்கும் பேரிழப்பாகும். சமீபத்தில், அவரது தேர்வு முடிந்ததும் அவரது குடும்பத்தினர் உள்ளூர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். தங்கள் மகள் இன்டர்ன்ஷிப் முடிந்து திரும்புவதைக் காண அவர்கள் உற்சாகமாகவும் ஆவலுடனும் காத்திருந்தனர்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“