ஜூன் 19 அன்று, டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச (ஐ.ஜி.ஐ) விமான நிலையத்தில் விமானம் புறப்படும் வரிசையில் ஒரு “வயதானவர்” நீல நிற தலைப்பாகையுடன் வெள்ளை தாடியுடன் நின்றார். அவர் கனடாவுக்குச் செல்லும் 67 வயதான ரஷ்விந்தர் சிங் சஹோதா என்று சொன்னார்.
அவர் பேசும்போது, விமானப் நிலையத்தில் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகள் ஏதோ வித்தியாசமானதை உணர்ந்தனர்: அவரின் குரலுக்கும் வயதிற்கும் முரணாக இருந்தது. அவரை கூர்ந்து கவனித்தபோது, தோல் சுருக்கம் இல்லாமல் இளமையாக இருப்பதை அவர்கள் கவனித்தனர்.
தொடர்ந்து விசாரணையில் முதியவர் போல் வேடமணிந்த 24 வயது இளைஞர், குரு சேவக் சிங் என்பது தெரியவந்தது. மேலும், மற்றொருவரின் போலி பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்யவிருந்தது தெரிவந்தது. அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதேபோல் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற அவரது மனைவி அர்ச்சனா கவுர், கணவன் சிக்கிய பின் அங்கிருந்து தப்பிஓடினார். பின்னர் அவரும் பிடிபட்டார். குற்றம் சாட்டப்பட்டவரும் அவரது மனைவியும் லக்னோவில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் ஒரு வாரமாக மஹிபால்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். குரு சேவக் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: To take ‘donkey route’ to US, 24-year-old poses as elderly man after salon makeover, gets caught at IGI airport
டி.சி.பி (ஐஜிஐ) உஷா ரங்னானி இதுகுறித்து பேசுகையில், "இந்த வழக்கின் விசாரணையின் போது, குரு சேவக் மற்றும் அவரது மனைவி இருவரும் அமெரிக்கா சென்று வேலை பார்த்து நல்ல வாழ்வாதாரத்திற்கான வாய்ப்பைப் பெற போலி பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்யவிருந்தனர்.
குரு சேவக் தனது நண்பர் ஒருவர் மூலம் ஜக்கி என்கிற ஜக்ஜீத் சிங் என்ற முகவருடன் தொடர்பு கொண்டுள்ளார். முகவர் மூலம் போலி பாஸ்போர்ட்டில் அமெரிக்கா செல்ல இருந்தார். இதற்கு முகவர் ரூ.60 லட்சம் கொடுக்க சொல்லியுள்ளார். donkey route மூலமாக கனடா வழியாக அமெரிக்காவுக்கு அனுப்புவதாக ஜக்ஜீத் உறுதியளித்துள்ளார். இதற்கு முதல் தொகையாக குரு சேவக் ரூ.30 லட்சம் கொடுத்துள்ளார்.
அமெரிக்கா சென்ற பின் மீதத் தொகையை தருவதாக குரு சேவக் கூறியுள்ளார். ஒப்பந்தத்தின்படி, ஜக்கி அவருக்கு ரஷ்விந்தர் சிங் சஹோதா என்பவரின் பாஸ்போர்ட்டை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அதே போல் அவரது மனைவிக்கு ஹர்ஜீத் கவுர் என்பவர் பெயரில் கனடா செல்ல போலி பாஸ்போர்ட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மேக்கப் கதை
அந்த முகவர் கூறிய படி, முகவரின் உதவியாளர் ஒருவர் சேவக்கை திலக் நகரில் உள்ள ஒரு சலூன் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு "வயதானவர்" போல் மேக்கப் போட கூறியுள்ளனர்.
அந்த பாஸ்போர்ட்டில் உள்ளது போல் சேவக்கிற்கு மேக் ஓவர் செய்ய முகவர் உதவியாளர் கூறியுள்ளார். இதற்கு ரூ.2000 கொடுத்துள்ளனர் என்று ஒரு அதிகாரி கூறினார்.
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் உள்ள அவரது மறைவிடத்தில் இருந்து ஏஜென்ட் ஜக்கியையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது, ஜக்கி, உ.பி.யின் பிஜ்னோரில் "ட்ரூ டாக் இமேஜினேஷன்" என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வந்தது தெரியவந்தது. இவர் ஒரு பட்டதாரி ஆவார்.
ஜக்கி அந்த நிறுவனத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு மற்றும் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த தொழிலில் இருப்பதால், அவருக்கு சிலரை தெரியவந்துள்ளது. வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி மக்களை ஏமாற்றும் சில முகவர்களுடன் அவர் தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின் இவரும் அந்த வேலை செய்யத் தொடங்கினார்," என்று டிசிபி கூறினார்.
மேக்ஓவர் நடந்த சலூன் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார், அவர் இப்போது இந்த வழக்கில் சாட்சியாக உள்ளார் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.