26/11 Mumbai Attacks : 2008 ஆம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டல் உட்பட முக்கியமான இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலான ’26/11 மும்பை தாக்குதல்’ நடந்து இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைகிறது.
26/11 Attacks Anniversary: மும்பையின் ஆறாத வடு:
இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு வரை உலகத்தில் இருக்கும் அனைவரும், நினைத்து நினைத்து கண்ணீர் வடித்தது அமெரிக்காவில் இருந்த இரட்டை கோபுரம் பின்லேடன் மூலம் சிதைக்கப்பட்டது தான். ஆனால் நம் நாட்டிலேயே இப்படி ஒரு மாபெரும் இழப்பு சந்திக்க நேரிடும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
2008-ம் ஆண்டு நவம்பர், 26-ந் தேதி, இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்றால் அது மிகையல்ல். இந்தியாவின் நிதித்தலைநகரமான மும்பை பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சின்னாப்பின்னமாகப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவினர்.அடுத்த சில மணி நேரங்களில், மும்பை ரயில் நிலையம், தி ஓபராய் ஹோட்டல், தாஜ் ஹோட்டல், காமா குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவமனை, தியேட்டர், சர்ச் என்று பொதுமக்கள் கூடும் இடங்களில், ஒரே நேரத்தில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்களை அரங்கேற்றுகிறது, அந்த தீவிரவாதக் கும்பல்.
இவர்கள் முதலில் தாக்குதல் நடத்தியது, மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில்தான். இந்த தாக்குதலில் 58 பேர் பலியானார்கள். 120 பேர் காயம் அடைந்தனர். அஜ்மல் கசாப் வழிநடத்திய இந்த தாக்குதலை மூன்று தீவிரவாதிகள் நடத்தினர். இந்த தாக்குதல் 90 நிமிடம் நீடித்தது.
சாமானிய இந்தியனுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த தீவிரவாதிகளின் குறி, ரயில் நிலையம், காமா காப்பகத்தின் மீது வைக்கப்பட்டது. அவர்களின் வெறிச்செயலுக்கு 166 பேர் இரையாகினர். 320 பேர் படுகாயமடைந்தனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட தாஜ் ஹோட்டல்
3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற மும்பை தாக்குதல் சம்பவத்தால், இந்தியாவின் ஒவ்வொரு நிமிடமும் பதற்றத்துடனேயே கழிந்தன. அடுத்து என்ன நடக்கும்? எங்கு குண்டு வெடிக்கும்? தீவிரவாதிகளின் அடுத்த குறி யார் மீது? என ஏகப்பட்ட கேள்விகள். தொடர்ந்து 3 நாட்களுக்கு இந்த சம்பவம் உலகம் முழுவதும் தலைப்பு செய்தி.
இறுதியில், கடும் துப்பாக்கி சத்தத்திற்கு பிறகு, இந்தியாவில், அமைதியை மீட்டெடுக்க, இந்திய ராணுவம் துப்பாக்கியால், முடிவுரை எழுதியது. ராணுவத்தின் அதிரடித் தாக்குதலில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டு, 2012 நவம்பர் 21- ல் அதிகாலையில் புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
சிறை பிடிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள்
இப்படி ஒரு தாக்குதல் இனி இந்தியாவிற்கு வேண்டாம்.. என்பதே அன்றைய தினம் ஒட்டுமொத்த மக்களிடன் வேண்டுதலாக இருந்தது. இந்த மும்பை தாக்குதலின் 10 ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
வருடங்கள் கழிந்தும் மும்பை மக்களிடம் இந்த தாக்குதல் ஏற்படுத்திவிட்டு சென்ற வடு, கடுகு அளவும் குறையவில்லை. தங்களின் குடும்பங்களை இழந்து வாடும் எத்தனையோ உள்ளங்களின் அழுகை குரல் இன்று வரை மும்பையில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது.