கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தாய், தந்தை இருவரையும் இழந்து, இஸ்ரேலில் தன் தாத்தா, பாட்டி வீட்டில் வளர்ந்துவரும் 11 வயது சிறுவன் மோஷே ஹோல்ட்ஸ்பெர்க் (11 வயது) சிறுவன், 9 ஆண்டுகள் கழித்து வரும் ஜனவரியில் மும்பைக்கு வருகை புரிகிறான். வரும் ஜனவரியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பிரதமர் நரேந்திரமோடி பிப்ரவரி மாதம் பாலஸ்தீனத்திற்கு முதன்முறையாக பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டபோது, ஜெருசலேமில் சிறுவன் மோஷே ஹோல்ட்ஸ்பெர்க்கை சந்தித்தார். அப்போது, சிறுவன் மோஷே, “எல்லோரின் சார்பாகவும் உங்களிடம் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். எங்கள் மீது எப்போதும் அன்பு வைத்திருங்கள். நன்றி. என் பெற்றோரை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நான் அஃபுலாவில் வசித்தாலும், மும்பைக்கு நான் பெரியவனான பின்பு வருவேன். நான் அங்கு வாழ்வேன்”, என கூறினான்.
தன் தாய், தந்தையை தீவிரவாத தாக்குதலுக்கு இழந்தபோது சிறுவன் மோஷே 2 வயது குழந்தைதான்.
சிறுவனின் இந்த பேச்சுக்கு பின், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம், சிறுவன் மோஷேவுக்கும், அவனது தாத்தா, பாட்டிக்கும் 10 ஆண்டு கால விசாவை வழங்கியது.
இந்தியாவுக்கு தன் மனைவியுடன் வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஆக்ரா சென்று தாஜ்மஹாலையும், அதன்பின் அகமதாபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். மேலும், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், கனவரி 16 அன்று நடைபெறும் இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் கருத்தரங்கிலும் அவர் கலந்துகொண்டு உரையாற்றுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.