குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை குஜராத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத்தில் பா.ஜ.க முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் 40 தொகுதிகளில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள் உள்பட தேசியத் தலைவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) பரப்புரையில் ஈடுபட்டனர்.
நட்டா உள்பட 15 மூத்த தலைவர்கள் 40க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் உரையாற்றினர். மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் அனுராக் தாக்கூர், முதல்வர்கள் யோகி ஆதித்யநாத் (உத்தர பிரதேசம்), ஹிமந்தா பிஸ்வா சர்மா (அசாம்) மற்றும் சிவராஜ் சிங் சவுகான் (மத்திய பிரதேசம்), பா.ஜ.க யுவமோர்ச்சா தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா மற்றும் லடாக் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர்.
தலைவர்கள் பிரச்சாரம் செய்வதற்கான இடங்களை கவனமாக தேர்வு செய்வதை சுட்டிக்காட்டி, ஒரு மூத்த பா.ஜ.க தலைவர் கூறுகையில், " தேர்தலின் போது தேசிய தலைவர்கள் மாநிலங்களுக்கு கொண்டு வரப்படுகிறார்கள். 2012 முதல் பா.ஜ.க இந்த உத்தியை பயன்படுத்தி வருகிறது.
உதாரணமாக, யோகி ஆதித்யநாத் குஜராத்திற்கு வந்து, பா.ஜ.கவின் கீழ் மட்டுமே மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள், வேறு எந்தக் அரசிலும் இல்லை என்று சொன்னால், அது வாக்காளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதேபோன்று, ஜே.பி.நட்டா போன்ற தலைவர்களை குஜராத்தியர் அல்லாத மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்வது அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான பயனுள்ள உத்தியாகும். ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் வாக்காளர்களை ஈர்க்க கூடியவர். அவருக்கு என தனி வாக்கு வங்கி உள்ளது" என்றார்.
ராகுலின் சாவர்க்கர் கருத்து - விமர்சனம்
குஜராத்தில் நட்டா 3 பேரணிகளில் உரையாற்றுகிறார். நவ்சாரி, அங்கலேஷ்வர் மற்றும் ராஜ்கோட் (கிழக்கு) ஆகிய இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். நவ்சாரியில் பரப்புரை மேற்கொண்ட அவர், மத்தியில் மோடி அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்துப் பேசினார். தொடர்ந்து சாவர்க்கர் குறித்து ராகுல் தெரிவித்ததை விமர்சித்தார். இந்துத்துவா சித்தாந்தவாதியான வி.டி சாவர்க்கரைப் பற்றி ராகுல் பேசியுள்ளார் எனக் கூறி விமர்சித்தார். குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது மாநிலம் ஊரடங்கு மாநிலமாக இருந்தது. நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பதவியேற்ற பிறகு இது மாறியது எனக் கூறினார்.
சாவர்க்கர் பற்றிய ராகுலின் கருத்துக்கு சவுஹானும் விமர்சித்தார். மேலும் காங்கிரஸ் எப்போதும் சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிக்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.
காங்கிரஸை மூழ்கடிக்க வேண்டும்
யோகி ஆதித்யநாத் வான்கனேர், ஜகாடியா மற்றும் சோரியாசி தொகுதிகளில் நடந்த கூட்டங்களில் உரையாற்றினார். அப்போது, "இது வளர்ச்சிக்கும் அழிவுக்கும் இடையேயான போட்டி, மரியாதை மற்றும் அவமரியாதை, தேசபக்தி மற்றும் பயங்கரவாதம், தேசிய மற்றும் தேச விரோதிகளுக்கு இடையேயான போராட்டம் என்று பேசினார்.
மேலும், "காங்கிரஸ் கட்சியை நர்மதாவில் மூழ்கடிக்க வேண்டும்" என்றார். காங்கிரஸ் நாட்டிற்கு வளர்ச்சி, செழிப்பு, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய மதிப்பை வழங்காது என கூறினார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் 3 பொதுக்கூட்டங்களில் உரையாற்ற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் உடல்நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
தேசியத் தலைவர்கள் தவிர, 14 மாநிலத் தலைவர்கள் 36 சட்டமன்றத் தொகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.