2G Case Verdict : ஆ.ராசா – கனிமொழி விடுதலை, மேல் முறையீடு செய்ய இருப்பதாக சிபிஐ அறிவிப்பு

2G Case Verdict LIVE UPDATES : டெல்லி தனி நீதிமன்றத்தில் ஆ.ராசா, கனிமொழி ஆஜர் ஆனார்கள். திமுக.வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வழக்கு இது!

2G Case Judgement LIVE UPDATES
2G Case Judgement LIVE UPDATES

2G Case Verdict LIVE UPDATES : டெல்லி தனி நீதிமன்றத்தில் ஆ.ராசா, கனிமொழி ஆஜர் ஆனார்கள். திமுக.வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வழக்கு இது!

2G Case Judgement LIVE UPDATES
2G Case Judgement LIVE UPDATES : விடுதலை ஆனதும் திமுக.வினரை நோக்கி நீதிமன்ற வளாகத்தில் கையசைத்த கனிமொழி

2G Case Verdict LIVE UPDATES ‘ஐஇ தமிழ்’ தருகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இமேஜை சீர்குலைத்த முக்கியமான வழக்கு இது! கடந்த 2004-2009 மற்றும் 2009-2014 ஆகிய ஆண்டுகளில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, உச்சநீதிமன்றம் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது.

2 ஜி வழக்கில் திமுக கொள்கை பரப்பு செயலாளரும் அப்போதைய மத்திய டெலிகாம் அமைச்சருமான ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும், 3 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த ஆறு ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

2G Case Judgement LIVE UPDATES
2G Case Judgement LIVE UPDATES : நீதிமன்றத்தை விட்டு ஆ.ராசா வெளியே வந்தபோது..

2 ஜி வழக்கின் தீர்ப்பு தேதி சிலபல வாய்தாக்களுக்கு பிறகு டிசம்பர் 5-ஆம் தேதி அறிவிக்கப்படும் என ஓ.பி.ஷைனி தெரிவித்தார். அன்று டிசம்பர் 21-ஆம் தேதி 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என, நீதிபதி ஓ.பி.ஷைனி உறுதிபட அறிவித்தார். அப்போது, தீர்ப்பு எழுதும் பணி நிறைவடைந்துவிட்டதாகவும், தீர்ப்பு வழங்கப்படும் தினமன்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி கூறியது குறிப்பிடத்தக்கது.

அதன்படி 2 ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று (21-ம் தேதி) ஆகும். முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் தொலைத்தொடர்பு துறை செயலாளர் சித்தார்த் பெஹூரா, அ.ராசாவின் முன்னாள் தனிச்செயலர், யுனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், ரிலையன்ஸ் குழுமத்தின் மூன்று செயல் அலுவலர்கள், கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர்கள் என 19 பேர் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இன்று அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.

2G Case Verdict LIVE UPDATES :

மாலை 3.30 : காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோர் 2ஜி வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழியை டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து கூறினர்.

மாலை 3.00 : தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக சிபிஐ செய்தி தொடர்பாளர் அபிஷேக் தயாள் கூறினார்.

பகல் 2.00 : காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல், ‘ஆரம்பத்தில் இருந்தே இந்த விவகாரத்தில் அரசுக்கு இழப்பு எதுவும் இல்லை என கூறி வருகிறேன். எனது கருத்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புகாரை சுமத்திய முன்னாள் சி.ஏ.ஜி. வினோத்ராய் மன்னிப்பு கோரவேண்டும். அவர் எந்தப் பதவியிலும் தொடரக்கூடாது’ என்றார்.

பகல் 1.40 : ‘2ஜி வழக்கு தொடர்பான பொய்யான பிரசாரத்தை முன்வைத்தே 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஜெயித்தது. எனவே இதற்கு பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளிக்க வேண்டும்’ என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் மாநிலங்களவையில் கோரினார்.

பகல் 1.30 : 2ஜி விடுதலை விவகாரம், நாடாளுமன்ற  மேலவையில் எதிரொலித்தது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்கவேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரினர்.

பகல் 1.20 : தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பிலும் மேல் முறையீடு செய்ய இருப்பதாக அந்தத் துறை வட்டாரங்கள் கூறின.

பகல் 1.10 : மொத்தம் 3 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 35 பேரை விடுவித்து இன்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் 17 பேரும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் 19 பேரும், எஸ்ஸார் புரமோட்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்ந்த 3-வது வழக்கில் 8 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

பகல் 12.40 : 2ஜி வழக்கில் விடுதலை குறித்து கனிமொழி கூறுகையில், ‘நீதி நிலை நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திமுக குடும்பத்திற்கு இது முக்கியமான நாள். எங்கள் மீதான வசவுகளுக்கும், நாங்கள் எதிர்கொண்ட பிரச்னைகளுக்கும் இந்தத் தீர்ப்பு பதில் கொடுத்திருக்கிறது’ என்றார். இந்த வழக்கில் கனிமொழி 6 மாதங்கள் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பகல் 12.15 : ‘2ஜி ஏலத்தில் ஊழல் மலிந்த நேர்மையற்ற கொள்கை கடைபிடிக்கப்பட்டிருக்கிறது என 2012-ம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது’ என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

பகல் 12.10 : ‘ராஜா குற்றச் சதியில் ஈடுபட்டார் என்பதற்கு ஆவணங்களில் எதுவும் இல்லை. ஊழல் மற்றும் தவறான செய்கைகளில் அவரது பங்குக்கும் எந்த ஆதாரமும் இல்லை’ என நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பில் கூறியுள்ளார்.

பகல் 11.55 : கலைஞர் டிவி-க்கு 200 கோடி ரூபா பணப் பரிமாற்றம் நடந்தது தொடர்பான புகாருக்கு முகாந்திரம் இல்லை என ஓ.பி.சைனி குறிப்பிட்டுள்ளார்.

பகல் 11.50 : 2ஜி வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட இந்த வழக்கு தொடர்பான சொத்துகளை விடுவிக்க நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

பகல் 11.40 : கனிமொழி, ஆ.ராசா விடுதலை குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் எடுத்து கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு கருணாநிதி பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. அதில், ‘அநீதி வீழும், அறம் வெல்லும்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

காலை 11.20 : டிடிவி.தினகரன் அணியை சேர்ந்தவரான நாஞ்சில் சம்பத், ‘மோடி கோபாலபுரம் வந்தபோதே இப்படித்தான் நடக்கும் என தெரிந்ததுதான். இனி தி.மு.க.வை பாஜக நெருங்கும். திமுக.வில் கனிமொழி கை ஓங்கும். ஸ்டாலினுக்கு சங்கடங்கள் ஏற்படும். அதை பார்ப்பீர்கள்!’ என்றார் சம்பத்.

காலை 11.15 : கனிமொழியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினர்.

காலை 11.10 : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘திமுக.வை அழிக்கும் நோக்குடன் தொடரப்பட்டதுதான் 2ஜி வழக்கு. இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு’ என்றார்.

காலை 11.05 : ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு மகிழ்ச்சி தெரிவித்து சென்னையில் ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்.

காலை 11.05 : நீதிமன்ற அறையை விட்டு வெளியே வந்த கனிமொழி, விடுதலை செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

காலை 11.05 : காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ, ‘2ஜி வழக்கை பிரசாரமாக முன்வைத்தும் போஸ்டர்கள் ஒட்டியும்தான் மத்தியில் பாஜக.வும், தமிழகத்தில் அதிமுக.வும் ஆட்சிக்கு வந்தன. இப்போது அவர்கள் மன்னிப்பு கேட்பார்களா? என்பதை பார்க்க வேண்டும்’ என்றார்.

காலை 11.00 : இந்த வழக்கின் மூல புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமி, ‘தனி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்வேன்’ என்றார்.

காலை 10.55 : திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறுகையில், ‘திமுக.வுக்கு இனி எல்லாமே வெற்றிதான்’ என்றார்.

காலை 10.50 : திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், ‘திமுக மீது சுமத்தப்பட்ட பழி துடைத்து எறியப்பட்டிருக்கிறது’ என்றார்.

காலை 10.45 : சென்னையில் திமுக எம்.பி. கனிமொழியின் சி.ஐ.டி காலனி இல்லத்தில் திமுக.வினர் கூடி பட்டாசு வெடித்து கொண்டாடினர். இனிப்புகளையும் வழங்கினர்.

காலை 10.45 : டெல்லி பாட்டியாலா வளாகத்தில் கூடிய ஆ.ராசா, கனிமொழி ஆகியோரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10.40 : 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்பட  அத்தனை பேரும் விடுதலை செய்யப்பட்டனர். குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதாக நீதிபதி கூறினார்.

காலை 10.20 : கலைஞர் டி.வி.யின் எம்.டி.யாக இருந்த சரத் ரெட்டி நீதிமன்றம் வந்தார். இவர் நிர்வாக இயக்குனராக இருந்தபோதே 200 கோடி ரூபாய் பரிமாற்றம் கலைஞர் டி.வி.க்கு வந்தது.

காலை 10.00 : நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காலை 9.40 : திமுக தரப்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்ட சீனியர்கள் சிலரும் நீதிமன்ற வளாகம் வந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களான ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டவர்களும் வந்துவிட்டனர்.

காலை 9.35 : தனி நீதிபதி ஓ.பி.சைனி நீதிமன்றம் வந்தார். தீர்ப்பு வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டார் அவர். காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

காலை 9.30 : வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்கள் எந்த நேரமும் நீதிமன்ற வளாகம் வந்து சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 9.20 : 2ஜி வழக்கின் மூல புகார்தாரரான சுப்பிரமணியன்சுவாமி நீதிமன்றம் வந்தார்.

காலை 9.15 : டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தீர்ப்பு தள்ளிப் போகுமா? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தீர்ப்பு வெளியாவதற்கான சூழல்களே உள்ளன. 2ஜி வழக்கின் சாட்சிகளில் ஒருவரான பாஜக.வின் ஆசீர்வாதம் ஆச்சாரி நேற்று இரவு, ‘இன்று தீர்ப்பு வழங்கப்படும்’ என நம்பிக்கை தெரிவித்து ட்வீட் செய்தார்.

காலை 9.00 : நடே எதிர்பார்க்கும் 2ஜி வழக்கு தீர்ப்பையொட்டி டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகம் காலை முதல் பரபரப்புடன் காணப்படுகிறது. தமிழகத்தில் இருந்து கனிமொழி மற்றும் ஆ.ராசா ஆதரவு திமுக.வினர் பலர் டெல்லிக்கு வந்து நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர்.

 

 

 

 

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 2g case judgement live updates dmk a raja kanimozhi mp

Next Story
இளம் பல்கலைக்கழக வேந்தர்… அம்பேத்கர் விருது பெற்று சாதனை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com