கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்ற 2ஜி வழக்கில், குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது எனக்கூறி, முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் நீதிபதி ஓ.பி.ஷைனி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு நீதிபதி ஓ.பி.ஷைனி முன்வைத்துள்ள காரணங்கள்:
- குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது.
- குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை.
- இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையானது, தவறான வாசிப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட வாசிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
- விசாரணையின்போது சாட்சியங்கள் அளித்த வாய்வழி வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
- குற்றப்பத்திரிக்கையில் உள்ள பல தகவல்கள் தவறாக உள்ளன. குறிப்பாக, முன்னாள் நிதி செயலாளர் நுழைவு கட்டணத்தை மாற்றியமைக்க பரிந்துரைத்தார் என்பதும், சில விதிமுறைகளை அ.ராசா நீக்கினார் என்பதும் தவறாக உள்ளது.
- இந்த வழக்கின் குற்றச்சதிக்கு ஆ.ராசாதான் காரணம் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. தவறான செயல், சதி, ஊழல் உள்ளிட்டவற்றுக்கும் ஆதாரம் இல்லை.