2ஜி வழக்கில் தீர்ப்பு கூறிய ஓம் பிரகாஷ் சைனி, சப் இன்ஸ்பெக்டராக பணியை தொடங்கியவர். டெல்லி செங்கோட்டை தாக்குதலுக்கு தூக்கு தண்டனை கொடுத்தவர்.
2ஜி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ தனி நீதிபதி ஓம் பிரகாஷ் சைனி நேற்று (டிசம்பர் 21) உத்தரவு பிறப்பித்தார். 58 வயதான நீதிபதி ஓ.பி.சைனி, ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்! இவர் டெல்லி போலீஸில் 6 ஆண்டுகள் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியிருக்கிறார்.
1991-ம் ஆண்டு டெல்லி ஜூடிசியல் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார் சைனி. அந்த ஆண்டு ஹரியானாவில் இருந்து தேர்ச்சி பெற்ற ஒரே நபர் இவர்தான். 2000-மாவது ஆண்டு டெல்லி செங்கோட்டை மீது நடந்த தீவிரவாத தாக்குதல் வழக்கை கூடுதல் செசன்ஸ் நீதிபதியாக இருந்து விசாரித்தவர் ஓம் பிரகாஷ் சைனிதான்.
டெல்லி செங்கோட்டை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகம்மது ஆரிஃப்-க்கு தூக்குத் தண்டனை விதித்தார் சைனி. அதே வழக்கில் வேறு சில குற்றவாளிகளுக்கு வெவ்வேறு எண்ணிக்கையிலான ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கினார்.
அந்த வழக்கில் தீர்ப்பு கூறிய பிறகு ஓ.பி.சைனிக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. 2010-ம் ஆண்டு காமன்வெல்த் ஊழல் வழக்கையும் ஓ.பி.சைனியே விசாரித்தார். அந்த வழக்கில் சுரேஷ் கல்மாடியின் சகாக்கள் லலித் பானோட், வி.கே.வர்மா, கே.யு.கே.ரெட்டி உள்ளிட்டவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கினார்.
தேசிய அலுமினியம் நிறுவன ஊழல் வழக்கையும் சைனி விசாரித்தார். கடந்த 6 ஆண்டுகளாக 2 ஜி வழக்குகளை மட்டும் விசாரிக்கும் பொறுப்பு நீதிபதி ஓ.பி.சைனிக்கு வழங்கப்பட்டது. அப்போது நீதிமன்ற நடைமுறைகளில் கறாராக நடந்து கொண்டார்.
இதற்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், 2015-ல் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை கூறலாம். அப்போது எஸ்ஸார் நிறுவன புரமோட்டரான அன்ஷுமன் ரூயா, ஒரு மனுவை தாக்கல் செய்தார். வெளிநாடுகள் செல்லவிருப்பதாக அந்த மனுவில் கூறியிருந்த அன்ஷுமன், எந்தெந்த நாடுகள் என்கிற விவரத்தை குறிப்பிடவில்லை.
அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த சைனி, ‘நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக’ விமர்சித்தார். இன்னொரு தருணத்தில், சிபிஐ தன்னிடம் உள்ள ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் வைத்துக்கொண்டு அடிக்கடி அவகாசம் கேட்டுக் கொண்டிருப்பதாக கடுமையாக கூறினார். ‘இந்த நடைமுறை இப்படி போய்க்கொண்டிருந்தால், நீதி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்’ என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
தற்போது இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் கனிமொழி, 2011 நவம்பரில் ஜாமீன் கேட்டு இதே ஓ.பி.சைனியிடம் மனு தாக்கல் செய்தார். அப்போது பெண் என்ற முறையிலும், ஏற்கனவே சில மாதங்கள் சிறையில் இருந்ததையும் சுட்டிக்காட்டி ஜாமீன் கோரிக்கையை வைத்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி சைனி, ‘கனிமொழி செல்வாக்கான ஒரு அரசியல்வாதி. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எந்த சாட்சியும் இன்ஃப்ளுயன்ஸ் செய்யப்படும் ‘ரிஸ்க்’கை எடுக்க நீதிமன்றம் தயாரில்லை’ என்று கூறினார். அப்போது கனிமொழியின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.