2ஜி வழக்கில் நீதிபதி ஓ பி சைனி தீர்ப்பை முன்னாள் சிபிஐ இயக்குனர் ஒருவர் கடுமையாக எதிர்த்துள்ளார்.
அவர் ஏ பி சிங். முன்னாள் சிபிஐ இயக்குனரான இவர், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது இயக்குனராக பதவி வகித்தார். இந்த தீர்ப்பு குறித்து சிங் கூறுகையில், "மிகவும் ஏமாற்றமாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது" என்றார். மற்றொரு சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா, "இந்த வழக்கில் என்னுடைய தரப்பு வாதத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது" என்கிறார்.
ரஞ்சித் சின்ஹா 2012 முதல் 2014 வரை சிபிஐ இயக்குனராக பதவி வகித்தார். அவர் பதவி விலகும் வரை 2ஜி வழக்கு விசாரணையை அவர் தான் மேற்கொண்டார். ஆனால், அவர் பதவி விலக இருந்த சில நாட்களுக்கு முன்பு, உச்சநீதிமன்றம் அவரை தாமாகவே இந்த வழக்கில் இருந்து விடுவித்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. ஏனெனில், 2ஜி வழக்கில் தொடர்புடைய சிலர் ரஞ்சித் சின்ஹாவை சந்தித்ததாக எழுந்த புகாரை அடுத்து, நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்தது. இதுதொடர்பாக, இப்போதுவரை ரஞ்சித் சின்ஹாவிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து ரஞ்சித் சின்ஹா இந்திய எக்ஸ்பிரஸிடம் அளித்த பேட்டியில், "கீழ் நீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பைத் தான், நானும் எனது அறிக்கையாக உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க முயற்சித்தேன். முன்பு, 2ஜி வழக்கு விசாரணை தவறான திசையில் செல்வதாக நான் உணர்ந்தேன். இதை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல முயற்சித்தேன். ஆனால், எனது அறிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை" என்றார்.
ரஞ்சித் சின்ஹாவிற்கு முன்னதாக சிபிஐ இயக்குனராக 2010-2012 வரை பதவி வகித்த ஏ பி சிங் கூறுகையில், "இந்த வழக்கு குறித்து சிபிஐ மூன்று விதமான குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தும், நீதிபதி ஏன் இந்த வழக்கை மிக கடினமானதாக பாவித்தார் என தெரியவில்லை. ஸ்வான், யுனிடெக் போன்ற நிறுவனங்கள் முறைமையை மாற்றியமைத்து, 2ஜி ஒதுக்கீட்டு திட்டத்தை கையாண்டதில் மாற்றுக் கருத்து இல்லை" என்று தெரிவித்துள்ளார்.