துபாயில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிபெற்றது. பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்திகளை பரப்பிய காஷ்மீரை சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கான பிரதமரின் சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆக்ரா பொறியியல் கல்லூரியில் கல்வி பயின்று வந்தனர்.
கல்லூரி திறக்கப்படாது
இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட மாணவர்களை கைது செய்யக்கோரி, கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கல்லூரி திறக்கப்படாது என ராஜா பல்வந்த் சிங் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆதரவாக கருத்து பதிவட்டதாக தெரிவித்ததும், மூன்று மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து, கல்லூரி மற்றும் விடுதியிலிருந்து வெளியேற்றியது. ஆனால், மாணவர்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டோம் என வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவர்கள் காவல் துறையினர் மேற்பார்வையில் கல்லூரியிலிருந்தனர்.
இந்து அமைப்பினர் போராட்டம்
இந்நிலையில், கல்லூரிக்கு வெளியே மாணவர்களை கைது செய்ய வேண்டும் என இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியதையடுத்து, அர்ஷீத் யூசுப், இனாயத் அல்தாஃப் ஷேக் மற்றும் ஷோகத் அகமது கனாய் ஆகிய மூன்று மாணவர்கள் மீதும் ஜகதீஷ்புரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நேற்று மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி தலைமை பொறுப்பாளர் ஆசிஷ் சுக்லா கூறுகையில், “பிரதமர் திட்டத்தின் கீழ் மொத்தம் 11 காஷ்மீர் மாணவர்கள் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மற்ற காஷ்மீர் மாணவர்கள் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஏற்கனவே அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு தெரிவித்துள்ளோம். உரிய நேரத்தில் நடவடிக்கையும் எடுத்துவிட்டோம். ஆனால், எப்படி எங்கள் கல்லூரி வளாகத்திற்குள் வெளியாட்கள் நுழையலாம் என்பது தான் கேள்வி.
விடுதிக்குள் அத்துமீறி நுழைய முயற்சி
நேற்று மாலை 3.45 மணியளவில் திடீரென சிலர் தடையை மீறி கல்லூரிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் விடுதிக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றனர். இது தவறானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இதுதொடர்பாக அவர்கள் கல்லூரி இயக்குநரிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. விடுதிக்குள் நுழைய முடியாததால், வளாகத்தில் முழக்கங்களை எழுப்பியதுடன், வெளியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வந்தும், நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, மூன்று மாணவர்கள் குறித்தும், கல்லூரி நிர்வாகத்தை குறித்து தவறான வார்த்தைகளில் பேசினர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, எங்கள் RBS குழுமத்தில் உள்ள கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும்” என தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் மட்டும் RBS குழுமத்திற்குச் சொந்தமாக ஏழு கல்வி நிறுவனங்கள் உள்ளன.
இதற்கிடையில், மூன்று மாணவர்கள் மீதான வழக்கை கைவிட வேண்டும், இது அவர்களின் எதிர்காலத்தை அழித்துவிடும் என உ.பி முதல்வருக்கு ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil