கேரளா மாநிலத்தின் கண்ணூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சக பயணி மீது தீ வைத்ததில் 2 வயது குழந்தை உள்பட 3 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் அந்த ரயில் பெட்டியில் இருந்த 8 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
ஆலப்புழா-கண்ணூர் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கண்ணூர் நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. கோழிக்கோடு மற்றும் கண்ணூர் இடையே உள்ள கோரபுழா பாலத்தை ரயில் இரவு 9.45 மணியளவில் கடந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் ரயில் தண்டவாளத்தில் இருந்து இன்று அதிகாலை மீட்கப்பட்டது. ரயில் தீ பிடிக்கும் என அஞ்சி 3 பேரும் ரயிலில் இருந்து குதித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் தவ்ஃபீக், மற்றொருவர் ரெஹானா என அடையாளம் தெரியவந்துள்ளது. மேலும் தண்டவாளத்தில் கிடந்த ஒரு பையிலிருந்து இரண்டு மொபைல் போன்கள் மற்றும் பெட்ரோல் பாட்டில் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதனால் இந்தச் சம்பவத்தில் ஏதேனும் தீவிரவாத சதி இருக்கிறதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோழிக்கோடு நகர போலீஸ் கமிஷனர் ராஜ்பால் மீனா கூறுகையில், இந்த சம்பவத்தில் 8 பயணிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், " கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சந்தேகப்படும்படியான எரிபொருட்களுடன் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிக்குள் வந்தார். ரயில் சென்று கொண்டிருந்த போது அவர் தன் எதிரே அமர்ந்திருந்த பயணியின் மீது ஏதோ ஸ்ப்ரேயர் மூலம் ஸ்ப்ரே செய்தார். நாங்கள் என்ன நடக்கிறது என ஊகிக்கும் முன்னர் அவர் அந்த நபர் மீது தீ வைத்துவிட்டு தப்பிவிட்டார்" என்றனர்.
மற்றொருவர் கூறுகையில், சம்பவத்தையடுத்து பீதியடைந்த சக பயணிகள் அலறி அடித்து அருகில் உள்ள பெட்டிகளுக்கு ஓடினர். பின்னர் எச்சரிக்கை சங்கிலியை இழுத்து கோரப்புழா ஆற்றுப்பாலத்தில் ரயில் நின்றது. அப்போது அந்த நபர் தப்பி ஓடிவிட்டார் எனக் கூறினார். தொடர்ந்து ரயிலின் 2 பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரயில் புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் சம்பவம் குறித்து காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ, உள்துறை அமைச்சகமும் விசாரணை மேற்கொள்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“