கர்நாடகத்தின் பேளூர், ஹலேபிட், சோம்நாதபுரா ஆகிய பகுதிகளில் உள்ள ஹோய்சாள கோயில்களை 2022-2023 க்கான உலகப் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற வைப்பதற்காக பரிந்துரைக்க இறுதி செய்துள்ளதாக மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 15, 2014 முதல் யுனெஸ்கோவின் தற்காலிக பட்டியலில் 'ஹொய்சாளவின் கோயில்கள்' உள்ளன. மேலும் நமது நாட்டின் வரலாறு மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கு சான்றாகவும் இவை இருக்கின்றன.
யுனெஸ்கோவுக்கான நிரந்தர இந்தியப் பிரதிநிதி விஷால் வி சர்மா யுனெஸ்கோ உலக பாரம்பரிய அமைப்பின் இயக்குநர் லாசரே எளென்டெளவிடம் இந்தப் பரிந்துரையை அளித்தார்.
தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இதுதொடர்பாக விஷால் வி சர்மா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,
ஹோய்சாளப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட கோயில்களை உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்வதில் இந்தியா பெருமை கொள்கிறது. கலை வரலாற்றாசிரியர்கள் குழுவினர் சிற்ப கலைத்திறனை ஆசிய கலையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கலாசார, சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி கூறுகையில், நமது நாட்டுக்கு இதுவொரு சிறந்த தருணமாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வளர்ச்சி மற்றும் கலாசாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல்படுகிறது என்றார்.
யுனெஸ்கோவிடம் பரிந்துரைக்கப்பட்ட 3 ஹோய்சாள கோயில்களும் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனவே அவற்றின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அதன் மூலம் செய்யப்படுகின்றன என்று கலாச்சார அமைச்சகம் தெரிவித்தது.
ஹோய்சாளப் பேரரசு பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆட்சி செய்து வந்தது. கட்டடக் கலைக்கு அதிக முக்கியத்துவத்தை ஹோய்சாளப் பேரரசு கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil