”பாஜக தனக்காக செயல்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி மக்களுக்காக செயல்படுகிறது”, என, ராகுல் காந்தி காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்றபின் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்றார். அவருக்கு வெற்றிச் சான்றிதழை தேர்தல் குழு தலைவர் முல்லைப்பள்ளி ராமச்சந்திரன் வழங்கினார். இந்த விழாவில், சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். ராகுல் காந்தி பதவியேற்பு விழாவை முன்னிட்டு, டெல்லி காங்கிரஸ் அலுவலகம் விழாக்கோலம் பூண்டது.
தலைவராக பொறுப்பேற்றபின் பேசிய ராகுல் காந்தி, தன்னை தலைவராக தேர்ந்தெடுத்த கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும், “அரசியல் மக்களுக்கானது. அது அவர்களின் ஆயுதமாக உள்ளது. நாட்டின் மூலை முடுக்குகளுக்கு சென்று மக்களை சந்தித்திருக்கிறேன். மக்களுக்கு நன்மை செய்யவே அரசியலுக்கு வந்தேன். காங்கிரஸ் கட்சி நாட்டை 21-ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு சென்றது.”, என கூறினார்.
மேலும், மத்திய பாஜக அரசையும் அவர் கடுமையாக விமர்சித்தார். ”தற்போது நாட்டின் இயல்பே அழிக்கப்படுகிறது. மக்களுக்கு தேவையான சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது. அனைத்து முடிவுகளையும் ஒருவரே எடுக்கிறார். மக்கள் மாற்று கருத்து சொல்ல முடிவதில்லை. தற்போதைய ஆட்சியாளர்கள் பலத்தால் வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் நன்மை செய்து வெற்றியடையவில்லை.”, என பாஜக அரசை சாடினார்.
காங்கிரஸ் கட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கும் என ராகுல்காந்தி உறுதியளித்தார். “காங்கிரஸ் மக்களின் குரலை பிரதிபலிக்கும். அன்பு, பாசத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும். வெறுப்பை நாங்கள் வெறுப்பால் எதிர்கொள்ளவில்லை. அன்பால் எதிர்கொள்கிறோம். இனி ஒருவரையும் அழிக்க முடியாது. அதற்கு விடமாட்டோம். பாஜக மக்களை பிளவுபடுத்துகிறது. காங்கிரஸ் மக்களை இணைக்கிறது”, என கூறினார்.
”காங்கிரஸ் கட்சியே எனது குடும்பம். நாங்கள் இந்தியாவை பலப்படுத்துவோம். ஒவ்வொரு, காங்கிரஸ் தொண்டரை பாதுகாப்பதை கடமையாக நினைக்கிறேன். விளிம்புநிலை மக்களுக்காகவும், போராட முடியாதவர்களுக்காகவும் காங்கிரஸ் செயல்படுகிறது.”, என தெரிவித்தார்.