கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த மாதம் 28-ல் தாக்கிய ஒகி புயலால் கடும் சேதம் ஏற்பட்டது. மேலும், புயலின்போது கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்டுத் தரக் கோரி, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்துவருகின்றன. இன்னும் 462 மீனவர்கள் மீட்கப்படவில்லை என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
மழை பெய்தபோது வீடு இடிந்தும், மரம் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்ததிலும் மாவட்டம் முழுவதும் 11 பேர் பலியானார்கள்.
கடற்கரை கிராமங்களை கலங்க வைத்த ஒகி புயல் விவசாய நிலங்களையும் விட்டு வைக்கவில்லை. தென்னை, ரப்பர், தேக்கு, வாழை மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடு சாய்த்தது. வரப்புக்கு மேல் வளர்ந்து நின்ற நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகின.
ஓகி புயலில் பலியான விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நாசமான பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகளும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம், சாலை மறியலும் நடந்தது.
கடந்த டிசம்பர் 14ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி வந்து மக்களை சந்தித்தார்.
இந்த நிலையில், இன்று பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்தார். ஓகி புயல் பாதிப்புகள் குறித்தும், தமிழகத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கினார்.
இதைத் தொடர்ந்து பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஓகி புயல் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், கன்னியாகுமரியில் ஒருங்கமைந்த மீன்பிடி தளம் அமைக்க வேண்டும், ஓகி புயல் நிரந்தர சீரமைப்புக்கு 5,255 கோடி ரூபாயும், நிவாரண பணிகளுக்கு 747 கோடி ரூபாயும் ஒதுக்க வேண்டும், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை சீரமைக்க 9,302 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்” என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
இந்நிலையில், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா, லட்சத்தீவுக்கு ரூ.325 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், புயலால் முழுமையாக சேதமடைந்த சுமார் 1400 வீடுகள் மறுசீரமைப்பு செய்து தரப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.