Advertisment

கொரோனா: மத்திய காவல் படையில் 330க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழப்பு

கடந்த ஆண்டு இந்தியாவில் தொற்றுநோய் பரவ தொடங்கியதில் இருந்து இந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி வரை சுமார் ஒரு வருடத்தில் 53,343 சிஏபிஎஃப் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
CRPF

கொரோனா தொற்றால் இதுவரை 84,000-த்துக்கும் அதிகமாக மத்திய ஆயுதப்படை காவலர்கள் (CAF) பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 331 பேர் தொற்று பாதித்து உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

கொரோனா 2வது அலை பரவ தொடங்கியதிலிருந்து, மார்ச் 3வது வாரத்தில் 35 சதவீதத்திற்கும் அதிகமான தொற்று பாதிப்புகளும், 40 சதவீத உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. CAF களில் மிகப் பெரிய அளவிலான மத்திய ரிசர்வ் காவல் படையில் அதிக எண்ணிக்கையில் தொற்று பாதிப்பு மற்றும் இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு கொரோனா பரவ ஆரம்பித்தது முதல் இந்த ஆண்டு ஜூலை 6ஆம் தேதி வரை 84,045 சிஏபிஎஃப் பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24,840 பேர் சிஆர்பிஎஃப் ஐ சேர்ந்தவர்கள். கொரோனா தொற்றால் சிஆர்பிஎப் 125 வீரர்களை இழந்துள்ளது.

வீரர்களுக்கு ஏன் பாதிப்பு?

நாட்டை சுற்றி 9 லட்சம் மத்திய ஆயுத காவல் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இருப்பிடம், உணவு போன்றவை பகிர்ந்து வாழக்கூடியவையாக இருப்பதால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "பயிற்சி மையங்களும் பாதிக்கப்படக்கூடியவை. ஏனென்றால் மொத்த குழுவும் ஒன்றாக தங்கி உணவருந்தி மற்ற வேலைகளையும் ஒன்றாக செய்கிறது" என்றார். ஆயுதப்படைகளும் கிட்டதட்ட 45,000 கொரோனா பாதிப்புகளையும், 120 உயிரிழப்புகளையும் பதிவு செய்துள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) இதே காலகட்டத்தில் 22,978 பாதிப்புகளையும் மற்றும் 90 உயிரிழப்புகளையும் பதிவு செய்தது. மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) 19,676 பாதிப்புகள் மற்றும் 76 இறப்புகளை பதிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் தகவல் தெரிவிக்கிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த ஆண்டு இந்தியாவில் தொற்றுநோய் பரவ தொடங்கியதில் இருந்து இந்த ஆண்டு மார்ச் 23 வரை சுமார் ஒரு வருடத்தில் 53,343 சிஏபிஎஃப் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 203பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் கொரோனா பாதித்தவர்களில் 15,610 பேர் சிஆர்பிஎஃப், 14,278 பேர் பிஎஸ்எஃப், 11,513 பேர் சிஐஎஸ்எஃப், 5,747 பேர் சசசுத்திர சீமா பல்(SSB), 4736 பேர் இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை(ITBP), 660 பேர் தேசிய பேரிடர் பாதுகாப்பு படை(NDRF), 349 பேர் தேசிய பாதுகாப்பு படை(NSG)" என தெரிவித்தார்.

மேலும், "அனைத்து வீரர்களும் பிப்ரவரி இறுதியில் இருந்து தடுப்பூசி செலுத்த தொடங்கினர். இதுவரை 99 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 90 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டனர். கொரோனா இரண்டாவது அலை தொடங்கிய போது பெரும்பாலான வீரர்கள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்த ஆண்டு ஜூலை 6 வரை, 30,702 வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 128 பேர் உயிரிழந்துள்ளனர்" என தெரிவித்தார்.

சிஏபிஎஃப் வீரர்கள், ஆயுதப்படை வீரர்களுடன் முன்கள பணியாளர்கள் என வகைப்படுத்தப்படுகின்றனர். இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள் மற்றும் சில முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் பிப்ரவரி 1 ஆம் தேதி அனைத்து முன்களப் பணியாளர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

"கொரோனாவால் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ex gratia (நிவாரணம்) செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு போலீஸ் நினைவு தினத்தை (அக்டோபர் 21) கொரோனா காரணமாக உயிரிழந்த ஜவான்களுக்கு அர்ப்பணிக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது" என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிஏபிஎஃப் வீரர்களிடையே ஏற்பட்ட முதல் கொரோனா மரணம் ஐடிபிபி தலைமை கான்ஸ்டபிள் ரமேஷ் தோமர்தான். கடந்த ஆண்டு மே 28ஆம் தேதி கொரோனாவால் உயிரிழந்தார்.

தோமர் தனது மகன் மற்றும் மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்கான உத்தரகண்டிலிருந்து டெல்லிக்கு இடமாற்றம் செய்ய கோரியிருந்தார். உயிரிழந்த தோமர் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. தோமரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டதுடன் அவரது மகனின் வேலைக்கான விண்ணப்பம் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்த தகவலை தோமரின் மகன் சிராக் டோமர் கூறியுள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த ஐடிபிபி கான்ஸ்டபிள் சத்பால் சிங் சமோட்டாவின் மனைவி சுமன் தேவி கூறுகையில்," எனது கணவரால் அனைத்து நிதி சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. எம்.ஏ. படித்துள்ளேன். ஆனால் எனக்கு குலுவில் வழங்கப்பட்ட வேலையை நான் மறுத்துவிட்டேன். என் குழந்தை 7ஆம் வகுப்பு படித்த வருகிறது. சில ஆண்டுகளுக்கு பிறகு, என் குழந்தைக்கு வேலைவாய்ப்புக்காக அரசுக்கு விண்ணப்பிக்கலாம்" என்றார்.

ஐ.டி.பி.பி தலைமை கான்ஸ்டபிள் கிரண் மேதியின் மனைவி செவ்லி மேதி கூறுகையில், “எனது கணவர் திப்ருகரில் பணியமர்த்தப்பட்டார், அவர் இறந்த பிறகு, அரசு எங்களுக்கு அனைத்து நிதி உதவிகளையும் வழங்கியது" என்றார்.

மார்ச் 23ஆம் தேதி முதல் சிஆர்பிஎஃப்பில் 9,230 கொரோனா பாதிப்புகளும், 44 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. பிஎஸ்எஃப்பில் 8,250 பாதிப்புகளும், 41 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. சிஐஎஸ்எஃப்பில் 8,163 பாதிப்புகளும் 31 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. எஸ்எஸ்பியில் 3,569 கொரோனா பாதிப்புகளும் 6 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது. ஐடிபிபி யில் 1,151 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்தனர். என்டிஆர்எஃப்பில் 187 பாதிப்புகளும் ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. என்எஸ்ஜியில் 152 கொரோனா பாதிப்புகளும் ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.

ஜூலை 6 வரை, மொத்தம் 82,858 சிஏபிஎஃப் வீரர்கள் தொற்று பாதித்து குணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Crpf
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment