புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான மதச்சார்பற்ற ஐனநாயக முற்போக்கு கூட்டணியின் 4 நாள் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
முதலமைச்சர் வி.நாராயணசாமி, புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெயமூர்த்தி, சிபிஐ, சிபிஐ (எம்), வி.சி.க கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆளுநர் மாளிகையை முற்றுகைப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், ஆளுநர் மாளிகை மற்றும் சட்டமன்ற வளாகத்தின் 500 மீட்டருக்குள் போராட்டங்கள் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததால், ஆளுநர் மாளிகையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மறைமலை அடிகள் சாலையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
படம் : பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
ஐனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதற்கான, காரணங்கள் எதுவும் அறியப்படவில்லை.
சட்டம், ஒழுங்கு, அமைதி மற்றும் பொது நல்லிணக்கத்தைப் பராமரிக்க மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வீரர்களை போராட்டம் நடைபெறும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி புதுச்சேரியை விட்டு வெளியேறும் வரை எதிர்ப்புப் போராட்டம் தொடரும் என்று முதல்வர் தெரிவித்திருந்த நிலையில், கண்டன ஆர்ப்பாட்டம் நான்கு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
படம் : பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
முன்னதாக, இலவச அரிசி திட்டம் தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிரண் பேடிக்கு எதிரான மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil