மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலையை குக்கி சமூக கிளர்ச்சிக் குழுக்கள் முற்றுகையிட்டு இரண்டு மாத கால போராட்டம் நடத்தி வந்த நிலையில் அப்பகுதியில் போராட்டத்தை கைவிடுவதாக குக்கி குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன, இது மாநிலத்தின் முக்கிய நெடுஞ்சாலையாக உள்ளது. இருப்பினும், மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் தொடர்கின்றன.
நேற்று (ஜூலை 2) ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர், இதில் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டதாக காவல்துறை கூறியது.
மணிப்பூரில் இரு சமூகங்களிடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மோதல், வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. மணிப்பூரின் பெரும்பான்மை சமூகத்தினரான மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வலியுறுத்தினர். இதற்கு குக்கி சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே இரு சமூகங்களிடையே வன்முறை வெடித்துள்ளது. இந்த 2 மாத கால மோதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தன்னார்வலர் வெட்டி கொலை
தலைநகர் இம்பால்- நாகாலாந்தின் திமாபூருடன் இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை-2-ஐ மே 3 தேதி முதல் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் மாநிலத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு வருவதில் தடை ஏற்பட்டது. ஜூன் மாத தொடக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலத்திற்கு வருகை தந்தபோது வேண்டுகோள் விடுத்ததையடுத்து முற்றுகை தற்காலிகமாக நீக்கப்பட்டது.
இருப்பினும் ஜூன் 9 அன்று காங்போக்பி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் குக்கி-சோமி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதையடுத்து நெடுஞ்சாலை முற்றுகை மீண்டும் தொடங்கியது.
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் குக்கி தேசிய அமைப்பு - இவை இரண்டும் 2008 ஆம் ஆண்டு மத்திய அரசு மற்றும் மாநிலத்துடனான செயல்பாட்டு இடைநிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் வருகின்றன. அத்தியாவசிய தேவை மற்றும் தடையின்றி பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக முற்றுகை உடனடியாக நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மாநிலத்தில் இன்னும் பதற்றம் குறையவில்லை. ஞாயிற்றுக்கிழமை சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள லாங்சா - ஹ்மர்-குகி கிராமத்தில் டேவிட் தீக் என அடையாளம் காணப்பட்ட ஒரு நபர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
23-24 கிராமங்கள்
உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிராமத்தில் வன்முறை வெடித்தது. பெரும்பாலான மக்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையல் சில தன்னார்வலர்கள் அங்கு தங்கினர். இந்த தாக்குதலில் தன்னார்வலர்களில் ஒருவரான திக் கொல்லப்பட்டார்.
கிராமவாசி ஒருவர் கூறுகையில், "அதிகாலை 3-4 மணிக்கு கிராமங்களை எரிக்க ஆரம்பித்தனர். இங்கு சுமார் 23-24 கிராமங்கள் உள்ளன. முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு கிராமங்களை காலி செய்யும்படி எங்கள் ஹ்மர் தலைவர் கூறினார். இருப்பினும் எங்கள் வீடுகள் சூறையாடப்படுவதைத் தடுக்க, நாங்கள் 3-4 இளைஞர்களை கிராமங்களில் காவலுக்கு நிறுத்தினோம்" என்றார்.
பள்ளத்தாக்கில் உள்ள பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள கொய்ஜுமந்தாபியில், சுராசந்த்பூர் மலை மாவட்டத்தின் எல்லையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்தனர். உயிரிழந்தவர்கள் நிங்கோம்பம் இபோம்சா (34), நௌரெம் ராஜ்குமார் (26) மற்றும் ஹௌபம் இபோச்சா (44) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.