உத்தரகண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள நனிதானா மலைப்பகுதியில் இருந்து மினி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பல பயணிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதுவரை 48 பயணிகள் பலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
அதுமட்டுமின்றி, பாவோன் எனும் பகுதியில் இருந்து கிளம்பிய இந்த மினி பேருந்து ராம்நகருக்கு சென்றுக் கொண்டிருந்தது. 28 உட்காரும் இருக்கைகள் கொண்ட அந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளனர். நனிதானா மலைப்பகுதியில் மழை பெய்திருந்ததால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலைப் பகுதியில் கவிழந்துள்ளது. அதிகளவிலான பயணிகளை ஏற்றியது தான் இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த கோர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.