கேரள வெள்ள சேதாரம் : கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது கேரளம். பொருளாதார வகையில் எப்படியான பாதிப்புகளை சந்தித்திருக்கிறது கேரளா என பட்டியலிட்டு கூறியிருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
கேரள வெள்ள சேதாரம் : சிறப்பு சட்டமன்றக் கூட்டம்
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, நிவாரணப் பணிகள், மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று கேரளாவில் நடைபெற்றது.
வரலாறு காணாத அளவில் பெய்த மழையால் ஏற்பட்ட விளைவுகள்
- வெள்ளம் மற்றும் மண் சரிவு போன்ற காரணங்களால் சுமார் 483 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
- 14 நபர்களின் நிலை என்னவானது என்று இதுவரை எந்த ஒரு தகவலும் இல்லை.
- 140க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
- நிதி நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் கேரளாவின் வெள்ள சேதார மதிப்பீடானது 26,500 கோடியாகும்.
- ஆண்டறிக்கையில் சொல்லப்படும் இழப்பீடுகளை விட அதிக அளவு இழப்பீடுகளை சந்தித்திருக்கிறது என மேற்கோள் காட்டினார் பினராயி.
- ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து பெய்த கனமழையின் காரணமாக 14.5 லட்சம் நபர்கள் அருகில் இருக்கும் நிவாரண முகாம்களுக்கு பத்திரமாக அனுப்பப்பட்டனர்.
- நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட 3.91 லட்சம் குடும்பங்களுக்கு 10 ரூபாய் வரை நிதி உதவி அளிக்கப்பட்டது.
- 57,000 ஹெக்டார் பரப்பளவில் பயிரடப்பட்ட வேளாண் பயிர்கள் முற்றிலுமாக நாசம் அடைந்துள்ளது.
- அரிசி, கோதுமை மாவு, மற்றும் சர்க்கரை போன்ற அத்தியாவசிய தேவைகள் நிறைந்த ஃபீரி கிட்கள் முகாம்களில் இருந்து வெளியேறியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டுகள்
மிகவும் துரிதமாக மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நாங்கள் மிகப் பெரிய நன்றிக்கடன் பட்டுள்ளோம். உங்களின் பணிக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மீட்புப் பணிகள் முடிந்துவிட்டன. ஆனால் மறுசீரமைப்பும் கட்டுமானப் பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இச்செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
எதிர்கட்சித் தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்
மிக விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு, கேரளத்தினை மீட்டெடுக்கும் திட்டங்கள் தொடர்பாக கருத்துகள் கேட்கப்படும் என்று கூறினார் பினராயி விஜயன்.
அதே சமயத்தில் கேரள காங்கிரஸ்ஸின் துணைத் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான விடி சதீஸன் “தேவையில்லாமல் அணைகளில் இருந்து நீரை திறந்துவிட்டதன் விளைவாகவே இது போன்ற நிலை ஏற்பட்டது.
இது முற்றிலுமாக மனிதனால் உருவாக்கப்பட்ட வெள்ளம் தான்” என்று குற்றம் சாட்டினார். இருப்பினும் மக்களுக்குத் தேவையான உதவிகளை கேரள அரசு முன்னெடுக்கும் போது அரசிற்கு முழு ஆதரவினையும் தருவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.