ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பான ஏடிஆர் கூற்றுப்படி, 5 மாநில கட்சிகள் 2020-21 ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் 250.60 கோடி ரூபாய் நன்கொடை பெற்றதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, 2020-21 நிதியாண்டில் 31 மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.529.41 கோடியும், கட்சிகளின் மொத்த செலவு ரூ.414.02 கோடியாகவும் உள்ளது. இதில் திமுகவின் வருவாய் மட்டும் ரூ.149.95 கோடி. இரண்டாவது இடத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.107.99 கோடி வருவாய் பெற்றுள்ளது.
அதேவேளையில், மொத்த செலவிலும் ரூ218.49 கோடியுடன் திமுக முதலிடத்தில் உள்ளது. தெலுங்கு தேசம் ரூ. 54.769 கோடியும், அதிமுக ரூ. 42.37 கோடியும், ஜே.டி.யு ரூ. 24.35 கோடியும் டி.ஆர்.எஸ் ரூ. 22.35 கோடியும் செலவு செய்துள்ளன.
மேலே குறிப்பிட்டுள்ள டாப் 5 மாநில கட்சிகளின் மொத்த வருமானம் ரூ. 434.255 கோடியாகும். இது மொத்த அரசியல் கட்சிகளின் மொத்த வருமானத்தில் 82.03 சதவீதமாக உள்ளது
2020-21 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் ரூ.250.60 கோடி அல்லது தங்களின் வருமானத்தில் 47.34 சதவீதத்தை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாகப் பெற்றுள்ளன.
31 பிராந்தியக் கட்சிகளில் ஐந்து கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நன்கொடைகளை அறிவித்துள்ளன. 2020-21 நிதியாண்டில் 31 பிராந்தியக் கட்சிகளுக்கு கிடைத்த மொத்த வருமானத்தில், ரூ. 84.64 கோடி அதாவது 15.99 சதவீதம் வட்டி தொகை ஆகும்.
31 கட்சிகளில் 29 கட்சிகளின் மொத்த வருமானம் 2019-20 நிதியாண்டில் ரூ. 800.26 கோடியாக இருந்த நிலையில், 2020-21 நிதியாண்டில் ரூ.520.492 கோடியாகக் குறைந்துள்ளது. இது 34.96 சதவீதம் சரிவாகும்.
2020-21 நிதியாண்டில் 17 பிராந்தியக் கட்சிகள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை செலவிடாமல் வைத்திருப்பதாக அறிவித்துள்ளதாக ADR தெரிவித்துள்ளது.
ஏடிஆர் இந்த அறிக்கையை தயாரிக்கும் போது, தேசிய கட்சிகளில் பாஜகவின் வருவாய், செலவு குறித்து தகவல் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil