2018-ம் ஆண்டின் கடைசி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சென்னையைச் சேர்ந்த மருத்துவரும், ஏழை மக்களுக்கு 5 ரூபாய் கட்டணத்தில் சேவை செய்தவருமான ஜெயச்சந்திரனுக்கு புகழாரம் சூட்டினார்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம் 'மன் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். இதன்படி, 51-வது மற்றும் 2018-ம் ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பேசினார்.
''2018ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சாரம் சென்று அடைந்துள்ளது. எளிதாகத் தொழில் செய்யும் நாடுகளில் குறித்த தரவரிசையில் நம்நாடு முன்னேறி இருக்கிறது. ஸ்வச் பாரத் திட்டம் வெற்றி அடைந்து 95 சதவீத மக்களை நோக்கிச் சென்றுள்ளது.
இந்தியாவில் சிக்கிம் முதல் விமான நிலையத்தையும், வாரணாசியில் கங்கை நதிக்கரையில் புதிய போக்குவரத்தையும் தொடங்கி வைத்தோம். ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அதிகமான பதக்கங்களை வென்றுள்ளார்கள். இந்த வெற்றி 2019-ம் ஆண்டு தொடர வேண்டும் என விரும்புகிறேன். ஒற்றுமையின் சிலையும், உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலை குஜராத்தில் அமைக்கப்பட்டது.
வரும் குடியரசு தினத்துக்கு தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போஷா சிறப்பு விருந்தினராக வருகிறார். உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் கும்பமேளா நிகழ்ச்சியில் 150 நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஜெயச்சந்திரன் 5 ரூபாய் பெற்றுக்கொண்டு ஏழை மக்களுக்குச் சிகிச்சை அளித்து சேவை செய்தார். அவரின் சேவை ஈடு இணையில்லாதது. அதேபோல கர்நாடகாவைச் சேர்ந்த சுலாகிட்டி நரசம்மா என்ற வயதான பெண்ணும் தனது வாழ்நாளில் 15 ஆயிரம் பிரசவங்கள் பார்த்து சேவை செய்துள்ளார்.
அடுத்து மக்கள் கொண்டாட இருக்கும் லோஹ்ரி, பொங்கல், மகர சங்கராந்தி, உத்ராயணம், மாக பிகு, மஹி பூர்ணிமா ஆகிய பண்டிகைகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.