நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற பா.ஜ.க எதிர்ப்பு சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்றும், மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டமே ஆபத்தில் இருக்கும் என்ற செய்தியுடனும், ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்று கூடி, மாபெரும் பலத்தை வெளிப்படுத்தின.
ஆங்கிலத்தில் படிக்க: 5 takeaways from INDIA bloc’s Ramlila rally: From Congress’s Punjab message to AAP to TMC clarifying position
பொதுவான மேடை, மாறுபட்ட நிகழ்ச்சி நிரல்
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக ஒற்றுமைக்கான அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தங்கள் மாறுப்பட்ட நிகழ்ச்சி நிரலை மேடையில் முன்வைத்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர், காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கியதற்காக மோடி அரசைக் குறிவைத்து, தேர்தலை பா.ஜ.க.,வுக்குச் சாதகமாக மாற்ற நரேந்திர மோடி அரசு முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய நிலையில், அவர்களது பீகார் கூட்டாளியான தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஜே.டி(யு) கட்சிகளுடன் தனது அரசாங்கம் 17 மாதங்களில் ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியது என்று கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சகரிகா கோஷ், மத்திய அரசு "கூட்டாட்சி அமைப்பை முடிக்க" முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார், மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சி அடிக்கடி எழுப்பிய கோரிக்கையான, ஏழைகளின் நலனுக்கான நிதியை ஏன் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். சமாஜ்வாடி கட்சி (SP) தலைவர் அகிலேஷ் யாதவ், "PDA (பிச்தா, தலித் மற்றும் அல்ப்சங்க்யாக்)" என்ற தனது கருத்தை வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் தனது முன்னோடி ஹேமந்த் சோரனை ஆதரித்து, "யுவ சாம்ராட்" ஒருபோதும் "குனியமாட்டார்" என்றார். சம்பாய் சோரனைப் போலவே, ஆம் ஆத்மி தலைவரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான் தனது கட்சித் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கவனம் செலுத்தினார், அவரை சிறையில் அடைக்க முடியாது என்றும் வலியுறுத்தினார். கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா தனது உரையில் தனது கணவர் கைது செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்தார்.
உயர்மட்ட தலைவர்களை களமிறக்கிய காங்கிரஸ்
பேரணிக்கு ஒரு நாள் முன்னதாக, இந்த நிகழ்வு "நபர்களை மையமாகக் கொண்டதாக" இருக்காது என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. ஞாயிற்றுக்கிழமை, காங்கிரஸ் கட்சி தனது கவனத்தை திசைதிருப்பாமல் பார்த்துக் கொள்வதற்காக அதன் அனைத்து உயர்மட்ட தலைவர்களை மேடையில் நிறுத்தியது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் மேடையில் இருந்தனர். கார்கே, ராகுல், பிரியங்கா ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றினர்.
சுவாரஸ்யமாக, காங்கிரஸுக்கு இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் கூட்டத்தில் சோனியா காந்தியும் இருந்தார். காங்கிரஸின் பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் முடிவைக் குறிக்கும் வகையில் மும்பையில் மார்ச் 17 அன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா கலந்துக் கொள்ளவில்லை.
பஞ்சாபிற்கான செய்தி
பஞ்சாப் தவிர பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் சீட் பங்கீடு செய்து கொண்டுள்ளன. கார்கே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பகவந்த் மானுக்கு ஒரு செய்தியை அனுப்பினார்.
“ஒன்றாகச் செல்வோம். ஒன்றிணைந்து போராடினால்தான் சாதிப்போம் என்பதை பஞ்சாப் முதல்வர் ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன். இல்லையேல் ஒருவரையொருவர் அடக்கிக்கொண்டே போனால் முன்னேற மாட்டோம். முதலில் ஒன்றிணையக் கற்றுக் கொள்ளுங்கள், பிறரை உடைக்கக் கூடாது. இதுவே நமது கொள்கையாக இருக்க வேண்டும்,” என்று கார்கே கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 1-ம் தேதி கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி ஆளும் மாநிலத்தில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான காங்கிரஸ் கட்சித் தலைமையின் நம்பிக்கையை கார்கேவின் கருத்துகள் சுட்டிக்காட்டுவதாக காங்கிரஸ் உள்வட்டாரங்கள் தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி.க்களான பிரனீத் கவுர் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு மற்றும் ஆம் ஆத்மி எம்.பி சுஷில் குமார் ரிங்கு ஆகியோரை பஞ்சாபில் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களாக பா.ஜ.க அறிவித்த ஒரு நாள் கழித்து காங்கிரஸ் தலைவரின் சமரச கருத்துக்கள் வந்துள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் நிலைப்பாடு
மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்து, இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று எதிராக சென்றுள்ள நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை பேரணியில் இந்தியா கூட்டணியுடன் இணைந்தது. "திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தது, இருக்கிறது, என்றும் இருக்கும்," என்று கட்சியின் எம்.பி டெரெக் ஓ பிரையன் வலியுறுத்தினார். அவரது சக ராஜ்யசபா உறுப்பினரும் மற்றும் கட்சியின் மூத்த தலைவருமான சகாரிகா கோஸூம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியுடன் இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.
ராமரை அழைத்தல்
இந்த நிகழ்ச்சி ராம்லீலா மைதானத்தில் நடைபெறுவதால், ஜனவரியில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை புறக்கணித்ததற்காக எதிர்க்கட்சிகள் தங்கள் பேச்சுகளில் இந்து கடவுளான ராமரை அழைத்தன. ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா கூறுகையில், போரின் போது, "கோட்பாடுகளை... பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தி... தோல்வியுற்ற எதிரிகளுக்கு மரியாதை காட்டிய ராமரின் கொள்கைகளை" அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
பிரியங்கா காந்தி தனது இளமை பருவத்தில், தசரா அன்று தனது பாட்டி இந்திராவுடன் ராம்லீலா மைதானத்திற்கு செல்வதை நினைவு கூர்ந்தார். “இன்று ஆட்சியில் இருப்பவர்கள் தங்களை ராமபக்தர் என்று அழைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் கர்மகாண்டத்தில் சிக்கிக் கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன் ... கடவுள் ராமர் சத்தியத்திற்காகப் போராடியபோது, அவரிடம் சத்தா (சக்தி), வளங்கள் மற்றும் ரதம் (தேர்) இல்லை. ரதங்கள், வளங்கள், இராணுவம் மற்றும் தங்கம் அனைத்தும் ‘சோனே கி லங்காவில் (தங்க லங்கா) வாழ்ந்த ராவணனிடம் இருந்தன. ராமரிடம் உண்மை, நம்பிக்கை, உறுதி, பாசம், பணிவு, பொறுமை மற்றும் தைரியம் இருந்தது,” என்று கூறினார்.
"ராமரின் வாழ்க்கையின் செய்தியான" "அதிகாரம் நிரந்தரம் அல்ல. அது வந்து போகும்" என்று பிரதமர் மோடியிடம் கூற விரும்புவதாக பிரியங்கா காந்தி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.