/tamil-ie/media/media_files/uploads/2018/02/62895245.jpg)
ஹைதராபாத்தில் உள்ள ஒஸ்மானியா அரசு மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் தாயை அனுமதித்த 5 வயது சிறுவன், அவர் இறந்ததுகூட தெரியாமல் தாயின் அருகிலேயே உறங்கிய சம்பவம், அங்கிருந்தவர்களுக்கு கண்ணீரை வரவழைத்தது.
ஒஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் பெண் ஒருவரும், அவருடைய 5 வயது மகனும் வந்தனர். அப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூச்சுத்திணறலுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். பிறகு, அவசர பிரிவுக்கு சென்ற அப்பெண், தனக்கு சுவாசிக்க சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரை காப்பாற்ற செயற்கை சுவாசம் அளித்தனர். ஆனால், 30 நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி அப்பெண் இறந்துபோனார். ஆனால், தன் தாய் இறந்ததுகூட தெரியாமல் அந்த 5 வயது சிறுவன் தாயின் அருகிலேயே அசந்து உறங்கிவிட்டான். அதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் கண்கலங்கினர்.
இதன்பின், அச்சிறுவனை எழுப்பி அங்கிருந்த ஊழியர்கள் வைத்துக் கொண்டனர். இதன்பின், ‘ஹெல்ப்பிங் ஹேண்ட் ஃபவுண்டேஷன்’ என்ற அரசு சாரா அமைப்பு ஒன்றை சேர்ந்த முஸ்தபா ஹசன் அஸ்காரி என்பவரின் துணையுடன், அப்பெண்ணின் பையிலிருந்த ஆதார் அட்டை மூலம் அவரது அடையாளம் தெரியவந்தது.
அப்பெண், சமீனா சுல்தானா (36) என்பதும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் தனியே பிரிந்து சென்றதும் தெரியவந்தது. மேலும், அப்பெண் தற்போது, வேறொரு நபருடன் ராஜேந்திரா நகரில் வசித்து வந்துள்ளார்.
இதன்பின், மேலும் தீவிர தேடுதலுக்கு பின் 18 மணிநேரத்திற்கு பிறகு அப்பெண்ணின் பெற்றோரின் முகவரி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அச்சிறுவன் அப்பெண்ணின் பெற்றோரிடத்தில் ஒப்படைக்கப்பட்டான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.