1973-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் ப்ராஜெக்ட் டைகர் திட்டம் 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதையொட்டி புலிகள் இனம் அழிந்துவிட்ட கம்போடியாவுக்கு சில புலிகளை இந்தியாவில் இருந்து அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. கம்போடியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புலிகள் தென்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
கம்போடியாவில் கடைசியாக 2007-ம் ஆண்டு காட்டில் புலி இருப்பது கேமராவில் காணப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக கண்டம் தாண்டி ஆப்பிரிக்க சிறுத்தைகள் வெற்றிகரமாக இந்தியா கொண்டுவரப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியா நவம்பர் மாதம் கம்போடியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது கம்போடியாவில் மீண்டும் புலிகளை கொண்டு வரம் முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கார்பெட் தேசியப் பூங்காவில் 1973-ம் ஆண்டு தொடங்கிய ‘புராஜெக்ட் டைகர்’ திட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதியுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. வியட்நாம் மற்றும் லாவோஸிலும் புலிகள் அழிந்துவிட்டன. இருப்பினும் மற்ற நாடுகள் இதேபோன்று இடமாற்றங்களில் ஆர்வம் காட்டவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறினர்.
வேட்டையாடுதல் மற்றும் வாழ்விடத்திற்கு இடமில்லாமல் கம்போடியவில் புலிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2017-ம் ஆண்டு நாட்டில் மீண்டும் புலிகளை கொண்டு வரம் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என கம்போடியப் பிரதமர் அறிவித்தார்.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் எஸ்.பி யாதவ் கூறுகையில், நம் நாட்டு புலிகளை கம்போடியாவிற்கு இடமாற்றம் செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். இதற்கு முன் இந்தியாவில் இது நடந்ததில்லை.
இருப்பினும் தேவைக்கேற்ப புலிகளை உள்நாட்டிற்குள் இடமாற்றம் செய்து வந்தோம். உதாரணமாக, இந்தியாவில் அதிக புலிகள் வசிக்கும் கார்பெட் பூங்காவில் (உத்தரகாண்ட்) இருந்து சில புலிகளை அதே மாநிலத்தில் உள்ள ராஜாஜி தேசிய பூங்காவிற்கு மாற்றினோம் என்றார். மேலும் தற்போது கம்போடியாவிற்கு புலிகள் இடமாற்றம் செய்வது குறித்து இறுதி முடிவு செய்யப்பட்டால், IUCN இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் நெறிமுறைகள் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்தியக் குழுவொன்று ஏற்கனவே கம்போடியாவிற்கு பூர்வாங்க பயணத்தை மேற்கொண்டுள்ளதுடன், கம்போடியாவில் இருந்து ஒரு குழு பேச்சுவார்த்தைக்காக இந்தியாவுக்கு வந்துள்ளது.
இறுதி முடிவு எடுப்பதற்கு முன் நாம் பல காரணிகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணமாக, கம்போடியாவில் புலிகள் காணாமல் போனதற்கான காரணங்கள் தீர்க்கப்பட்டதா, புலிகளை வளர்க்க தேவையான வசதிகள் உள்ளதா மற்றும் உள்கட்டமைப்புகள் உள்ளதா உள்பட பலவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றார்.
'புராஜெக்ட் டைகர்' திட்டம் 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஏப்ரம் 9-ம் தேதி முதல் 3 நாட்கள் கர்நாடகாவில் உள்ள மைசூருவில் சர்வதேச உச்சி மாநாடு நடைபெறும் என மத்திய அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த மாநாட்டை
பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி வைக்கிறார். ஏப்ரல் 9 முதல் 11 வரை நடைபெறும் ‘மெகா நிகழ்வில்’ அனைத்து மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள், அதிகாரிகள், சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் எ.ஜி. ஓ அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 2022-ம் ஆண்டிற்கான மிகவும் எதிர்பார்க்கப்படும் புலி கணக்கெடுப்பின் தரவுகளை வெளியிடுவார். இது 5-வது புலி கணக்கெடுப்பு தரவாகும். 1973-ம் ஆண்டு 'புராஜெக்ட் டைகர்' திட்டம் தொடங்கப்பட்ட போது 18,278 சதுர கி.மீ பரப்பளவில் 9 புலி காப்பகங்கள் இருந்தன. . இன்று, இந்தியா முழுவதும் 53 புலிகள் காப்பகங்கள் 75,000 சதுர கி.மீ (நாட்டின் புவியியல் பரப்பளவில் சுமார் 2.4%) அதிகமாக உள்ளன. தற்போது சுமார் 3,000 புலிகள் உள்ளன. இந்தியாவில் 70% க்கும் அதிகமான காட்டுப் புலிகள் வாழ்கின்றன, இது ஆண்டுக்கு 6% வீதம் என்ற அடிப்படையில் உயர்ந்து வருகிறது.
உலகிலேயே இந்தியாவில் அதிகப்படியான CAT-அங்கீகாரம் பெற்ற புலிகள் காப்பகங்கள் உள்ளன. இந்தியாவில் 17 CAT-அங்கீகாரம் பெற்ற புலிகள் காப்பகங்கள் உள்ளன என்று யாதவ் கூறினார்.
புலிகள் பாதுகாப்புக்கு உதவும் வகையில் தன்னார்வ கிராம இடமாற்றத்திற்கான இழப்பீடு ஒரு குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 9-ம் தேதி நிகழ்வில் 'புராஜெக்ட் டைகர்' குறித்த ரூ.50 நினைவு நாணயமும் வெளியிடப்பட உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.