சபரிமலையில் தொடங்கும் மண்டல பூஜை காலத்தில் சந்நிதானத்துக்குச் செல்ல 550 இளம் பெண்கள் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்துள்ளனர்.
சபரிமலை ஆன்லைனில் முன்பதிவு:
சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்பும், பத்து வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை சபரிமலையில் நுழைய விடாமல் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதனால், மலைக்கு செல்ல முடியாமல் நிலக்கல்லில்லும் பம்பாவிலும் பல பெண் பக்தர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மலைப்பாதையில் போராட்டக்காரர்கள் பக்தர்கள் போல் திரண்டு விடுவதால் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
எனவே, சபரிமலை தொடர்ந்து பரபரப்பாகவே காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருடாந்திர கொண்டாட்டத்தை ஒட்டி, சபரிமலைக்கு செல்வதற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த வாரம் தொடங்கியது.www.sabarimalaq.com என்ற இணையதள முகவரியில் இதற்கான முன்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த முன்பதிவில் இதுவரை 550க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் முனபதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் முன் பதிவு செய்துள்ளனர். வரும் 16ஆம் தேதி ஐயப்பன் கோவில் திறக்கப்பட உள்ளதால் கேரள முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தரிசனத்திற்காக மொத்தம் 3.5 லட்சம் பேர் இதுவரை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பெண் பக்தர்களை மலைக்கு அழைத்துச் செல்ல கேதர்நாத், வைஷ்ணவதேவி கோவில்களில் பயன்படுத்தப்படுவதைப் போல் , ஹெலிகாப்டர்களை கேரள அரசு இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலையில் மண்டலம் மகரவிளக்குப் பூஜைக்காக வரும் 17ம் தேதி முதல் 41 நாட்களுக்கு சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.