தெலங்கானாவில் நிகழ்ந்த கோர விபத்து: பேருந்து கவிழ்ந்து 52 பயணிகள் பலி!

பேருந்தில் 25 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன

தெலங்கானா பேருந்து விபத்து : தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பேருந்து விபத்தில், 52 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஜகித்யாலா மாவட்டத்தில் உள்ள ராம்சாகர், சனிவாரம் பேட்டா, பெத்தபல்லி, ஹிம்மத் பேட்டா ஆகிய பகுதிகளை சேர்ந்த பலர் கொண்டகட்டு பகுதியில் இருந்து ஜகித்யாலாவுக்கு அரசு பேருந்தில் இன்று  சென்றுக்கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட 80 பயணிகள் பேருந்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, கொண்டகட்டு மலைப்பகுதில் இருந்து வரும் வழியில், கடைசி வளைவில் வந்த போது, எதிரே வந்த ஆட்டோ மீது மோதாமல் இருக்க, ஓட்டுனர் பேருந்தை இடதுபுறம் திருப்பி அங்கிருந்த வேகத்தடை மீது ஏற்றியதில், நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் 4 முறை புரண்டு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பெரும் சப்தத்துடன் நடந்த இவ்விபத்தையடுத்து, அருகிலிருந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் அளித்துவிட்டு, விபத்தில் சிக்கியவர்களை மீட்கத் தொடங்கினர். தகவல் அறிந்ததும் ஜகித்யாலா மாவட்ட ஆட்சியர் சரத், எஸ்.பி சிந்து ஷர்மா மற்றும் போலீஸார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன் பின்னர், 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுவினர், கிரேன்கள் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணிகளில் கிராமத்தினரும் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து பேருந்தில் 25 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், படுகாயமடைந்த 30க்-கும் மேற்பட்டோர் ஜகித்யாலா, கரீம் நகர் மற்றும் ஹைதராபாத் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 19 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது. படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த கோர விபத்தில் 2 கர்ப்பிணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் 9 மாத கர்ப்பிணியாவார். இவர், பேருந்து விபத்தால் அதிர்ச்சி அடைந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். இதில், குழந்தை பிரசவமும் ஏற்பட்டு, பிறந்த குழந்தையும் இறந்து விட்டது. இதேபோன்று, 7 மாத கர்ப்பிணியும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்லும் அரசு, தனியார் ஊழியர்களும் உயிரிழந்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close