BJP vs Congress | electoral bond funds | DMK | trinamool-congress: தேர்தல் பத்திரங்கள் 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தப் பத்திரங்கள் அறிமுகமாகி 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், 57 சதவீத நிதியை பெற்று பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது.
அக்கட்சி, தேர்தல் ஆணையத்திடம் அளித்த அறிவிப்பின்படி, 2017-2022 க்கு இடையில் ரூ.5,271.97 கோடியை பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது. 952.29 கோடியுடன் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மேலும்,2022-2023 நிதியாண்டுக்கான கட்சிகளின் வருடாந்திர அறிக்கையை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்துவருகிறது.
ஜனவரி 2, 2018 அன்று நரேந்திர மோடி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், இந்திய குடிமகன் அல்லது நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவி அளிக்கலாம்.
ரொக்க நன்கொடைகளுக்கு மாற்றாகவும், அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இது முன்மொழியப்பட்டது. 2017-2018 மற்றும் 2021-2022 க்கு இடைப்பட்ட காலத்தில், 9,208.23 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன.
மேலும், 2017-2018 முதல் 2021-2022 வரை பாஜகவுக்கு பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட பங்களிப்புகளின் மதிப்பு ரூ. 5,271.97 கோடி என தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் சமர்ப்பித்த வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகளின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
ஆங்கிலத்தில் வாசிக்க : 57% vs 10%: BJP vs Congress share in electoral bond funds
மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பிராந்தியக் கட்சிகளும் தேர்தல் பத்திர நிதியைப் பெரும் அளவில் பெறுகின்றன. மேற்கு வங்கத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் ரூ.767.88 கோடி நன்கொடைகளை பெற்று பாஜக, காங்கிரஸிற்கு அடுத்தப்படியாக 3ம் இடத்தில் உள்ளது.
ஒடிசாவில் 2000ஆம் ஆண்டு முதல் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் கட்சியான பிஜு ஜனதா தளம் 2018-2019 மற்றும் 2021-2022 க்கு இடையில் ரூ.622 கோடி தேர்தல் பத்திரங்களை அறிவித்தது.
2021 முதல் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக, 2019-2020 முதல் 2021-2022 வரையிலான மூன்று ஆண்டுகளில் ரூ.431.50 கோடி நன்கொடை பெற்றுள்ளது.
எனினும், முந்தைய இரண்டு நிதியாண்டுகளுக்கான அதன் அறிக்கைகளில் தேர்தல் பத்திரங்கள் எதுவும் இல்லை.
டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, சமீபத்தில் தேசிய கட்சியாக மாறியது. தேர்தல் பத்திரம் / தேர்தல் நம்பிக்கை என்ற பிரிவில் பல ஆண்டுகளாக ரூ.48.83 கோடி நன்கொடைகளை பெற்றதாக அறிவித்தது. அதில் எவ்வளவு தொகை பத்திரங்கள் மூலமாக மட்டுமே உள்ளது என்பதில் தெளிவு இல்லை.
பல்வேறு கூட்டணிகளின் தலைவராக பல ஆண்டுகளாக பீகாரில் ஆட்சியில் இருக்கும் ஜேடி(யு) 2019-2020 முதல் 2021-2022 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.24.40 கோடியை பெற்றுள்ளது.
ஆட்சியில் இல்லாத கட்சிகளில், தேர்தல் பத்திரங்கள் மூலம் NCP பெற்ற பங்களிப்பு அதிகபட்சமாக, 51.5 கோடி ரூபாய் ஆகும்.
சிபிஐ, சிபிஐ(எம்), பிஎஸ்பி மற்றும் தேசிய மக்கள் கட்சி (மேகாலயாவில் ஆளும் கட்சி) ஆகியவை தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்களுக்கு எந்த பங்களிப்பும் கிடைக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.