Karnataka Elections 2023: 224 இடங்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 5 மணி வரை 65.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பல்லாரியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெலகாவி மாவட்டத்தில் உள்ள சாவடியில் வரிசையில் நின்று கொண்டிருந்த 70 வயது மூதாட்டி உயிரிழந்த நிலையில், பேலூரில் உள்ள சிக்கோல் என்ற இடத்தில் வாக்களித்த சில நிமிடங்களில் ஜெயன்னா (49) என்பவர் உயிரிழந்தார்.
விஜயபுராவில் நடந்த ஒரு சம்பவத்தில், மசபினாலா கிராம மக்கள் EVMகளை ஏற்றிச் சென்ற தேர்தல் பணி வாகனத்தை தடுத்து நிறுத்தி, அதிகாரி ஒருவரை தாக்கி, கட்டுப்பாட்டு மற்றும் வாக்குச் சீட்டு அலகுகளை சேதப்படுத்தியதைத் தொடர்ந்து 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
கே.ஆர்.பேட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள கஞ்சிகெரே கிராம வாக்காளர்கள், பா.ஜ.க வேட்பாளர் கே.சி.நாராயண கவுடா கொடுத்ததாக கூறப்படும் அரிசி மற்றும் கோழியை திருப்பி கொடுத்தனர். வாக்காளர்களை கவரும் வகையில் செவ்வாய்க்கிழமை மாலை சேலைகள் மற்றும் கோழிக்கறிகள் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“