/indian-express-tamil/media/media_files/2025/02/25/ydDPbxEAiL01oUjfiRdg.jpg)
கர்நாடக எல்லைக்குள் தயாராக இருந்த பெங்களூரு - சென்னை விரைவுச் சாலை, அதிகாரப்பூர்வமற்ற முறையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை நாள்தோறும் சுமார் 1,600 முதல் 2,000 வாகனங்கள் பயன்படுத்துகின்றன.
ஹோஸ்கோட் மற்றும் கே.ஜி.எஃப் (பேத்தமங்கலா) இடையே கட்டணமில்லா 68 கி.மீ தூரத்தை பயன்படுத்துபவர்கள், கிராம சாலை வழியாக முல்பாகல் மற்றும் ஆந்திர பிரதேச எல்லையை அடைந்து வெளியேறுகின்றனர். கர்நாடகாவிற்குள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (என்.ஹெச்.ஏ.ஐ) கட்டப்பட்ட 71 கி.மீ விரைவுச் சாலையின் மீதமுள்ள 3 கிமீ நீளமும், மாநிலத்திற்கு வெளியே உள்ள மற்ற சாலைகளும், இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும்.
கர்நாடகாவை தாண்டி ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வழியாக சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் வரை சீரமைப்பு செல்கிறது. இந்த நான்கு வழிச் சாலையின் மொத்த நீளம் 260 கி.மீ. விரைவுச் சாலை, மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வகானங்கள் செல்ல அனுமதிக்கிறது.
என்.ஹெச்.ஏ.ஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஹோஸ்கோட் இன்டர்சேஞ்சில் பெத்தமங்களாவில் இருந்து வெளியேறும் பாதையை வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். அனைத்து சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். அனைத்து வகையான வாகனங்களும் சாலையை பயன்படுத்துகின்றன. சுங்கவரி வசூலிப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் வரை, எந்த வகை வாகனங்களையும் கட்டுப்படுத்த முடியாது. சுங்கவரி வசூலிக்க தலைமையகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
கர்நாடக எல்லையில், என்.ஹெச்.ஏ.ஐ இரண்டு சுங்கச்சாவடிகளை இயக்க வாய்ப்புள்ளது. பெங்களூரு - மைசூரு அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலை இயக்கப்பட்ட பிறகு, நெடுஞ்சாலையின் பிரதான பாதைகளில் பைக்குகள், ஆட்டோக்கள் மற்றும் டிராக்டர்கள் நுழைவதை என்.ஹெச்.ஏ.ஐ தடை செய்தது. புதிதாக திறக்கப்படும் விரைவு நெடுஞ்சாலையிலும் இந்த வகை வாகனங்கள் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.
பெங்களூரு - சென்னை விரைவுச்சாலையானது, தாபஸ்பேட்டையில் இருந்து ஹோஸ்கோட் வரை செயல்படும் சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தொட்டபல்லாபூர் மற்றும் தேவனஹள்ளி வழியாக செல்கிறது. இதன் மூலம் துமகுரு சாலை மற்றும் பெங்களூரு - ஹைதராபாத் சாலையில் இருந்து வரும் மக்கள் விரைவுச் சாலையை அணுக முடியும். என்.ஹெச்.ஏ.ஐ சமீபத்தில் தாபஸ்பேட்டையில் இருந்து தமிழக எல்லை வரை (பெங்களூரின் மேற்கு மற்றும் தெற்கு புறநகரில்) சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு கட்டுமானத்திற்கான டெண்டர்களை வெளியிட்டது.
தடையை ஏற்படுத்தும் குழாய்கள்
கர்நாடக எல்லைக்குள் விரைவுச் சாலையை என்.ஹெச்.ஏ.ஐ கட்டி முடித்திருந்தாலும், கோரமங்களா - சல்லகட்டா பள்ளத்தாக்கின் நீர்க் குழாய் இருப்பதால், கொளத்தூரில் (ஹோஸ்கோட் க்ளோவர்லீஃப் அருகே) ஒரு தடையாக உள்ளது. அங்கு கோலார் பக்கத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு அணுகலை வழங்குவதற்காக 480 மீட்டர் சாய்வுப் பாதையை உருவாக்க முன்மொழியப்பட்டது.
கோலாரில் உள்ள ஏரிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதற்காக 2016-17ல் 2 மீட்டர் குழாய் பதிக்கப்பட்டது. என்.ஹெச்.ஏ.ஐ, நீர்ப்பாசனத் துறையை அணுகி, இந்த திட்டத்தை கையிலெடுத்து, பாதாள சாக்கடை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தது. கிராம மக்களின் நலனுக்காக பாதாள சாக்கடை அமைக்க, என்.ஹெச்.ஏ.ஐ விரைவில் பொருத்தமான இடத்தை அடையாளம் காண வாய்ப்புள்ளது. பாதாளச் சாக்கடையின் கட்டுமானமானது கொளத்தூர் கிராம மக்கள், பெங்களூரு மற்றும் கோலாரை சென்றடைய உதவும்.
பெங்களூரு - கோலார் நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் திட்டம்
பெங்களூரு - சென்னை விரைவுச் சாலை எதிர்காலத்தில் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஹோஸ்கோட்டில் தொடங்கும் நெடுஞ்சாலையை அணுகுவது பெங்களூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய பணியாகும். காரணம், அவர்கள் எக்ஸ்பிரஸ்வேயை அடைய பழைய மெட்ராஸ் சாலையில் உள்ள பல போக்குவரத்து தடைகளை கடக்க வேண்டும். பீக் ஹவர்ஸின் போது, எஸ்.வி ரோடு மெட்ரோ ஸ்டேஷன், பைப்பனஹள்ளி, பென்னிகனஹள்ளி, டின் பேக்டரி மற்றும் கே.ஆர் புரம் போன்ற பல்வேறு இடங்களில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள், ஹோஸ்கோட் நோக்கி செல்லும் வாகன ஓட்டிகளின் பொறுமையை சோதிக்கும். ஒரு காலத்தில் நகரின் முக்கிய அடையாளமாக இருந்த கே.ஆர்.புரம் ரயில் பாதையின் மீது கட்டப்பட்ட கேபிள் - தடுப்புப் பாலம் தற்போது போக்குவரத்து நெரிசலாக மாறியுள்ளது.
நகரின் வளர்ச்சி மற்றும் புறநகரில் நகரமயமாக்கல் ஆகியவற்றால், போக்குவரத்து அளவு கடுமையாக அதிகரித்துள்ளது. உதாரணமாக, ஹோஸ்கோட் டோல் கேட்டை தினமும் 90,000 வாகனங்கள் கடக்கின்றன. இதனால் கே.ஆர்.புரத்தைத் தாண்டி டி.சி.பாளையம், பட்டரஹள்ளி போன்ற பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள சாலையை கே.ஆர்.புரத்தில் இருந்து ஆந்திர எல்லை வரை அகலப்படுத்த திட்டம் உள்ளது. இது பெங்களூரு - சென்னை விரைவுச் சாலைக்கு தடையற்ற அணுகலை உறுதி செய்யும்.
நன்றி - The Times of india
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.