7-year-old Aabid Ahmad Sheikh : பாகிஸ்தான் - இந்தியா என்றாலே எப்போதும் ஒரு வித எதிரலை தான் இரண்டு பக்கத்திலும். எல்லையாக இருந்தாலும் சரி கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி. பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நிலை இன்னும் மோசமானதாக போனது. இந்திய விமானப்படை ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத படையை அழிக்க எல்லை தாண்டி பாலக்கோட்டில் தாக்குதல் நடத்தியது.
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டார். போர் ஏற்படலாம் என்ற அளவிற்கு இரு பக்கத்திலும் பதட்டம் நிலவியது. ஐ.நாவின் போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் அபிநந்தன் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் இரு தரப்பு ஒருவாராக நிதானமடைந்தது.
போர், தீவிரவாதம், கலவரங்கள் இந்த காரணங்களை தவிர்த்து எல்லைப்பகுதியில் இரு தரப்பிற்கும் பேச்சுவார்த்தையே கிடையாது என்ற மனநிலையை மாற்றிவிட்டான் 7 வயது குட்டிச்சிறுவன். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்திருக்கிறது மினிமர்க் அஸ்தூர் என்ற கிராமம். அங்கு வசித்து வந்த சிறுவன தான் ஆபித் அகமது சேய்க். திங்கள் கிழமை அந்த குழந்தை காணாமல் போனதாக முகநூலில் அவனின் பெற்றோர்கள் பதிவு ஒன்றை வெளியிட்டனர்.
7-year-old Aabid Ahmad Sheikh - பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபித் உடல்
செவ்வாய் கிழமை இந்தியாவில், அச்சூரா கிராமத்தின் வழியே ஓடும் கிஷன்கங்கா ஆறு. அந்த ஆற்றில் ஒரு சிறுவனின் பிரேதம் மிதந்து வருவதை கண்டனர் அவ்வூர் மக்கள். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ராணுவத்திடம் அறிவிக்கப்பட்டது. அந்த குழந்தையின் உடலை மீட்ட ராணுவத்தினர் முறையான இறுதி அஞ்சலியை செலுத்தி, வியாழக்கிழமை, எல்லையை தாண்டி பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் அந்த உடலை ஒப்படைத்தனர். இரு தரப்பினரையும் வருத்தத்தில் ஆழ்த்திய இந்த குழந்தையின் மரணம் இரு நாட்டினையும் உணர்ச்சிகளால் ஒன்று சேர்த்துள்ளது.
என் வாழ்நாளில் நான் இப்படியான ஒரு இணக்கமான, ஆனால் வருந்துகின்ற விசயத்தை நான் பார்த்ததே இல்லை என்று கூறுகிறார் குரேஜ் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ நாசிர் அகமது குரேசி.
மேலும் படிக்க : இந்தியா – பாக். எல்லையில் குறைந்த போர்நிறுத்த விதிமுறை மீறல்கள்… ஆனால் பதட்டம் தணியவில்லை!