ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 74 வயது பெண்மணி இரட்டை குழந்தைகளுக்கு தாய் ஆகியுள்ளார். இவர் தான் அதிக வயதில் குழந்தைகளை பெற்ற பெண் என்பதால், உலக சாதனை படைத்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரக்ஷாராமம் பகுதியை சேர்ந்தவர் மங்காயம்மா. இவருக்கு ராஜா ராவ் என்பவருக்கும் 1962ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த இவர்களுக்கு, செயற்கை கருத்தரிப்பு மூலம் 55 வயது பெண்மணி குழந்தை பெற்ற சம்பவம் நினைவுக்கு வரவே, செயற்கை கருத்தரிப்பு மேற்கொள்ள மங்காயம்மா - ராஜா ராவ் தம்பதி முடிவு செய்தனர்.
தனியார் மருத்துவமனையை இவர்கள் அணுகினர். ஜனவரி மாதத்தில் மங்காயம்மாவிற்கு செயற்கை கருத்தரிப்பு செய்யப்பட்டது. சிறப்பு டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த மங்காயம்மாவுக்கு இன்று ( செப்டம்பர் 5ம் தேதி) இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மங்காயம்மாவிற்கு மாதவிடாய் காலம் முடிவடைந்துவிட்டதால், கருமுட்டைகளை டோனரிடம் இருந்து பெற்று, கணவரின் விந்தணுக்களின் மூலம் அதை கருவுற செய்து டாக்டர்கள் குழந்தை பிறக்க வைத்துள்ளனர்.
2016ம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 72 வயது பெண்மணி, குழந்தையை பெற்றது தான் இந்தியாவில் அதிக வயதில் குழந்தை பெற்ற பெண்மணி என்ற சாதனையாக இருந்த நிலையில், தற்போது 74 வயதில் ஆந்திர பெண்மணி, அதுவும் இரட்டையர்களை பெற்றெடுத்துள்ளார். இது உலக சாதனையாக இருக்கக்கூடும் என்று டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனனர்.