ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியத்தைவிட, மத்திய அரசில் பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்திட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் பெரும் பலனடைவார்கள் என கருதப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த நிதியாண்டில் இதற்கான முன்வரைவு அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
7வது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000-ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதனை ரூ.26,000-ஆக நிர்ணயிக்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 7வது ஊதியக்குழு பரிந்துரையைவிட அதிகமாக சம்பள உயர்வு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உறுதியளித்திருந்தார்.
இதனிடையே, ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, உயர்த்தப்பட்ட ஊதியத்தின் நிலுவைத்தொகையை செலுத்த மத்திய அரசு தயாராக இல்லை என தகவல் வெளியாகியது. இதற்கான திட்ட அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வரும் ஏப்ரல் முதல் வாரத்தில், அமைச்சரவை முன்பு தாக்கல் செய்வார் எனவும் கூறப்படுகிறது.