ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, உயர்த்தப்பட்ட ஊதியத்தின் நிலுவைத்தொகையை செலுத்த மத்திய அரசு தயாராக இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இதற்கான திட்ட அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வரும் ஏப்ரல் முதல் வாரத்தில், அமைச்சரவை முன்பு தாக்கல் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து The Sen Times எனும் இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதன் மூலம், நிலுவைத்தொகையால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட முடியும் என, அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
7-வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.7,000 - ரூ.18,000-ஆக நிர்ணயித்தது. அதேபோல், அதிகபட்ச ஊதியமாக ரூ.90,000-ரூ.2.5 லட்சம் வரை நிர்ணயித்தது. இது, 6-வது ஊதியக்குழு நிர்ணயித்த அடிப்படை ஊதியத்தை விட 2.57 மடங்கு அதிகம். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி முதல் குறைந்த ஊதியம் வாங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.18,000 சம்பளமாக வழங்கப்படுகிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி அமைச்சரவை ஒப்புதலை பெற்றன. இந்த பரிந்துரைகளின்படி நிர்ணயிக்கப்பட்ட ஊதியமானது வரும் ஏப்ரல் மாதம் முதல் ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், உயர்த்தப்பட்ட ஊதியத்தின் நிலுவைத்தொகையை செலுத்த வேண்டாம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இருப்பினும், குறைந்த ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கு ஊதியக்குழு நிர்ணயித்த தொகையைவிட சம்பளத்தை உயர்த்த நிதியமைச்சர் உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,000-லிருந்து ரூ.26,000-ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.