மத்தியப் பிரதேசத்தில் இன்று கோயில், மத வழிபாட்டு நிகழ்ச்சியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் ஷாஹ்பூர் கிராமத்தில் இன்று (ஆக.4) ஞாயிற்றுக்கிழமை கோயில் மத வழிபாட்டு நிகழ்ச்சியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் காயமடைந்த குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு யாதவ் உத்தரவிட்டார். முதல்வர் மோகன் யாதவ் வெளியிட்ட அறிக்கையில், “இன்று, சாகர் மாவட்டத்தின் ஷாபூரில் பெய்த கனமழையின் காரணமாக பாழடைந்த கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 அப்பாவி குழந்தைகள் இறந்த செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்த குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, இறந்த குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். விபத்தில் காயமடைந்த மற்ற குழந்தைகளும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அப்பாவி குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கூறினார்.
சம்பவம் குறித்துப் பேசிய சாகர் சரக ஆணையர் வீரேந்திர சிங் ராவத், உயிரிழந்த குழந்தைகள் 10 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“