பணமதிப்பிழப்பு நடவடிக்கை : 2017 - 18ஆம் ஆண்டிற்கான மத்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை இன்று வெளியானது. அதில் பணமதிப்பிழக்கத்திற்கு பின்பு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட பணத்தில் 99.30 சதவீதம் பணம் மீண்டும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தேசம் முழுவதும் பரவலாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் விமானங்கள் மூலமாக இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தங்களின் அன்றாடத் தேவைகளுக்காகவும் கூட மக்கள் காலை முதல் நள்ளிரவு வரை வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் நின்று பணத்தினைப் பெற்றார்கள்.
முன்னறிவுப்பு இன்றி எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கைகளால் சமானிய மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
2017 - 18ற்கான மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கை
கருப்பு பணத்தின் பயன்பாட்டினை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மத்திய அரசு கூறியது. மேலும் அச்சமயத்தில் சுமார் ரூ. 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாயினை அச்சிட்டது ரிசர்வ் வங்கி.
ஆனால் அதில் 15 லட்சத்து 31 கோடி ரூபாயை மக்கள் மீண்டும் வங்கிகளிலேயே டெபாசிட் செய்திருப்பதாக 2017 - 18ஆம் ஆண்டிற்கான மத்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. மிச்சம் இருக்கும் 13 ஆயிரம் கோடி தான் வங்கிக்கு திரும்பவில்லை என்று கூறியுள்ளது.
ஆய்வறிக்கை குறித்து கேள்வி எழுப்பிய முன்னாள் நிதி அமைச்சர்
இந்த பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் இதனால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி குறித்து, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தன்னுடைய ட்விட்டர் பகுதியில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
திரும்பி வராத 13 ஆயிரம் கோடி எங்கே சென்றிருக்கும் என்ற கேள்வியையும் கேட்டிருக்கிறார் சிதம்பரம்.