Puducherry Kamatchi Amman Temple Land issue : புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் நிலம் தொடர்பாக இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “காமாட்சி அம்மன் கோவில் நில அபகரிப்பு பிரச்சனை இவ்வளவு பெரிதாக ஆன பிறகும் முதல்வர் வாய் திறக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
தினந்தோறும், ஏன் நிமிடத்திற்கு நிமிடம் பேட்டி கொடுக்கும் துணைநிலை ஆளுநர் அவர்களும் இதற்கு பதிலளிக்கவில்லை. இதைப்பற்றி கவலைப்படாமல் மீண்டும் நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று மமதையில் சுற்றி வருபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இந்தியா கூட்டணி பொதுமக்களின் பிரச்சனையை இன்று கையில் எடுத்துள்ளது. இந்த கூட்டத்தின் வாயிலாக புதுச்சேரி அரசை கேட்பது எல்லாம் இந்த ஒரு கோவில் சொத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்று தீர்வு கிடைத்துள்ளது.
இதேபோல் கடந்த 10 ஆண்டுகாலமாக இந்த வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் தான் இருந்துள்ளார். இவர் காலத்தில் பதியப்பட்ட பத்திரங்களையெல்லாம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக விலை நிலங்களை மனைப்பிரிவுகளாக பத்திரம் பதிவு செய்யப்பட்டது குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். 300 லே–அவுட் போட்டு சம்பாதித்தவர்கள் எல்லாம் இன்று பெரிய மனுஷன் போர்வையில் சுற்றி வருகிறார்கள்.
அவர்கள் போட்ட லே–அவுட்டில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அரசு அவர்களிடத்தில் பணம் பெற்று செய்து கொடுக்க வேண்டும். புதுச்சேரி நகரக்குழுமம் மற்றும் சப்–ரிஜிஸ்டர் அலுவலங்கள் எல்லாம் இன்று புரோக்கர்கள் பிடியில் சிக்கி உள்ளது. விலை நிலங்கள் அனுமதியின்றி வீட்டுமனைகளாக பதியப்பட்டுள்ளன.
வில்லியனூர் கொம்யூனில் அப்படி பதியப்பட்ட மனைகளுக்கு ரூ. 25 ஆயிரம் ஒரு லட்சம் பெற்றுக்கொண்டு பதிவு செய்கிறார்கள். இதன் மூலம் அரசுக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் கபலீகரம் செய்யப்பட்டுள்ளது.
இது ஏதோ பிஜேபி எம்எல்ஏ–வுக்கு எதிரான போராட்டம் என்று பார்க்கக் கூடாது. புதுச்சேரியில் உள்ள சில துறைகளில் அதிகாரிகள் முதல் கீழ் உள்ளவர்கள் வரை இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு உண்டு கொழுத்துள்ளார்கள். இப்படிப்பட்ட மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விளைநிலங்களை மனைகளாக லே–அவுட் போட்டவர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து அரசு கஜானாவை நிரப்ப வேண்டும் என்பது தான் போராட்டத்தின் நோக்கம்.
புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக மோசடியாக பதியப்பட்ட சொத்துக்களின் பட்டியலை ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைமைச் செயலரிடம் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்படும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.