அதிர்ச்சி வீடியோ: ”அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டுவோம்”: உ.பி. டிஜி உறுதிமொழி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என உத்தரபிரதேச ஊர்க்காவல் படை தலைமை இயக்குநர் சூர்ய குமார் உறுதி ஏற்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என உத்தரபிரதேச ஊர்க்காவல் படை தலைமை இயக்குநர் சூர்ய குமார் சுக்லா உறுதி ஏற்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 28-ஆம் தேதி லக்னோ பல்கலைக்கழகத்தில், பொது நிர்வாகம் துறையில், ராமர் கோவில் குறித்த நிகழ்ச்சி ஒன்று இந்து அமைப்பினரால் நிகழ்த்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில் சூர்ய குமார் சுக்லா இவ்வாறு உறுதிமொழி ஏற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ”அயோத்தியில் ராமர் கோவிலை விரைவில் கட்டுவோம் என இன்றைய தினத்தில் நாம் அனைவரும் உறுதியேற்போம். ஜெய் ஸ்ரீராம்”, என கூறுகிறார்.

இவர் வரும் ஆகஸ்டு மாதம் ஓய்வு பெற உள்ளார். “இச்சம்பவம் சிக்கலாக்கப்படுகிறது. ஆனால், ராமர் கோவில் குறித்து இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினரிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்வதில் எந்தவித தவறும் உள்ளது என நான் கருதவில்லை. நான் உறுதியேற்றதிலும் எந்த தவறும் இல்லை”, என சூர்யகுமார் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

உறுதியேற்றது மட்டுமல்லாமல், ராமர் கோவில் கட்டுவது முக்கியம் என அவரது தரப்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சூர்ய குமாரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச முதன்மை செயலாளர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். மேலும், சூர்ய குமார் அவ்வாறு உறுதி ஏற்றது, காவல் துறை சேவைக்கும் நடுநிலை, நேர்மை ஆகியவற்றிற்கு எதிரானது எனவும், ஐபிஎஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

×Close
×Close