சபரிமலை கோவில் பெண்கள் அனுமதி மறுப்பு : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண் பக்தர்களுக்கு ஆண்டாண்டு காலமாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து பலர் போராட்டங்களை மேற்கொண்டனர். நீதித் துறையிடம் தங்களுக்கான நீதியை போராடிப் பெற்றுள்ளனர் பெண்கள். கடந்த செப்டம்பர் 28ம் தேதி அப்படியான ஒரு வரலாற்றுத் தீர்ப்பினை அறிவித்தது உச்ச நீதிமன்றம்.
ஆனால் இன்னும் பெண்களால் உள்ளே செல்ல இயலாத அளவிற்கு போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன சபரிமலையில். ஆனால் சபரிமலை போலவே இந்தியாவில் நிறைய வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தான் வருகிறது. மேலும் படிக்க : இன்று சபரிமலையின் நடை திறக்கப்படுகிறது
காளி கோவில் பெண்கள் அனுமதி மறுப்பு
மேற்கு வங்கம் மாநிலத்தில் இருக்கும் பிர்பும் மாவட்டத்தில் இருக்கும் காளி கோவில் ஒன்றில் பெண்களுக்கு 34 வருடங்களுக்கும் மேலாக அனுமதி மறுக்கப்பட்டே வருகிறது.
இந்த காளி கோவிலுக்கு பூஜை செய்யும் கமிட்டியான சேத்லா ப்ரதீப் சங்கத்தின் இணைச் செயலாளர் சாய்பால் குஹா இது குறித்து கூறுகையில் “நாங்கள் எந்த பெண்களையும் பூஜை சமயத்தில் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. அப்படி அனுமதித்தால் அது நாங்கள் வாழும் பகுதிக்கு பெரும் ஆபத்தாக முடிந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்.
இவர்களின் கமிட்டியில் பெண் உறுப்பினர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் காளிக்கு வைக்கும் பிரசாதம் உட்பட அனைத்தையும் ஆண்களே செய்கிறார்கள் என்று அந்த கமிட்டியின் மற்றொரு உறுப்பினர் தெரிவித்திருக்கிறார்.
பெண்களின் அனுமதிக்கு மறுப்பு என்று எந்த ஒரு விதியும் முற்காலத்தில் இல்லை என்றும் இவை அனைத்தும் ஆண் வழி சமூகத்தின் நிலைப்பாட்டினையே காட்டுகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் இந்தோலோஜிஸ்ட் பதூரி. பெண்கள் வரவேண்டாம் என்றால் ஏன் இவர்கள் காளியை வழிபட வேண்டும் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இத்தனை பிரச்சனைகளையும் மீறி சபரிமலை கோவிலுக்கு பெண்கள் சென்றது போலவே காளி கோவிலிற்கும் பெண்கள் செல்ல முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் இந்த கமிட்டி அதற்கு அனுமதி மறுத்துவிட்டது.