scorecardresearch

கொரோனாவில் வாழ்க்கை; ஹோட்டல் மேனேஜர், டெலிவரிபாயாக மாறி சாலை விபத்தில் இறந்த பரிதாபம்

டெல்லியில் பெரிய ஹோட்டல் மேனேஜராக இருந்த சலீல் கொரோனா காரணமாக வேலையிழந்து, டெலிவரி பாயாக மாறி சாலை விபத்தில் இறந்த சோகம்

Jignasa Sinha

A life in Covid: Hotel manager to delivery staff to roadside death: பல வழிகளில், சலீல் திரிபாதியின் வாழ்க்கை இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களின் கதையைச் சொல்வதாக உள்ளது, இடைவிடாத தொற்றுநோய்களின் அலைகளுக்குப் பிறகு தொழிலாளர்களின் நிலை கவனம் பெறாமல் உள்ளது. மற்றும் பல வழிகளில், சலீலின் மரணம் சோகத்தில் முடிந்துள்ளது.

உ.பி.யின் அயோத்தியைச் சேர்ந்த திரிபாதி, டெல்லியின் மையப்பகுதியில் உள்ள உணவக மேலாளராக உயர்வதற்கு முன்பு பல நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரிந்தார். அவர் 36 வயதில் வசதியான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார், அவரது குடும்பத்தின் கருத்துப்படி, தேசிய தலைநகரில் ஒரு பரபரப்பான புறநகர்ப் பகுதியில் தனது மனைவி மற்றும் அவர்களது மகனுடன் குடியேறினார்.

2020 விடியும் வரை எல்லாம் நன்றாக சென்றது, பின்னர் முதல் ஊரடங்கு வந்தது. திரிபாதி கொரோனா முதல் அலையில் வேலையை இழந்தார், இரண்டாவது அலையில் அவரது தந்தையை இழந்தார். ஒரு வருடத்திற்குள், ஹோட்டல் நிர்வாகப் பட்டதாரியான திரிபாதி Zomato டெலிவரி எக்ஸிகியூட்டிவ் ஆகிவிட்டார்.

சனிக்கிழமை இரவு, ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் ஓட்டிய SUV வடிவத்தில் திரிபாதிக்கு இறுதி அடி வந்தது. வாகனம், அவரை இடித்ததாக போலீசார் தெரிவித்தனர். டிரைவர் குடிபோதையில் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். திரிபாதி சம்பவ இடத்திலேயே இறந்தார், அவரது மனைவி மற்றும் 10 வயது மகன் மற்றும் டெல்லி ரோகினியின் புத் விஹாரில் உள்ள அவர்களது வீட்டை விட்டு திரிபாதி மறைந்தார்.

திரிபாதி அடிபட்டபோது, ​​உணவு ஆர்டருக்காகக் காத்திருந்தார்.

“ஒரு காலத்தில் சலீல் திரிபாதி நன்றாக சம்பாதித்து சுகபோக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான். எங்களுக்கும் பணம் அனுப்புவார். முதல் ஊரடங்கிற்குப் பிறகு, எல்லாம் மாறிவிட்டது. வாழ்க்கை நடத்தவே சிரமப்பட்டோம். இப்போது அவரை இழந்துவிட்டோம். இப்போது வீட்டை எப்படி நடத்துவது என்று தெரியவில்லை. நான் ஒரு விவசாயி, என்னிடம் அதிக சேமிப்பு இல்லை, ”என்று அயோத்தியில் வசிக்கும் திரிபாதியின் மூத்த சகோதரர் மனோஜ் கூறினார்.

அவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி, திரிபாதி மீரட்டில் உள்ள JP இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜியில் சேருவதற்கு முன்பு டெல்லியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அவர் 2003 இல் பணியாற்றத் தொடங்கினார், மேலும் சிட்டி பார்க் ஹோட்டல், தி சூர்யா ஹோட்டல், பார்க் பிளாசா ஹோட்டல் & ரிசார்ட்ஸ் மற்றும் ரிக்கோ உணவகம் ஆகியவற்றில் வேலை செய்தார்.

“சலீல் திரிபாதி ஹட்சன் லேனில் உள்ள உணவகத்தில் மேலாளராக இருந்தார், ஆனால் கொரோனா முதல் அலையின் போது அந்த உணவகம் மூடப்பட்டதால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். சில மாதங்கள் வீட்டில் இருந்த அவர், தனது சேமிப்பை எல்லாம் செலவழித்துவிட்டார். லாக்டவுன் தற்காலிகமானது என்றும், சலீலுக்கு மீண்டும் வேலை கிடைக்கும் அல்லது விரைவில் நல்ல சம்பளம் கிடைக்கும் வேறொரு வேலையைக் கண்டுபிடிப்பார் என்றும் நாங்கள் நினைத்தோம். அவர் ஒரு ஓட்டல் வேலை ஒன்றைக் கண்டுபிடித்தார், ஆனால் 2021 இல் கொரோனா காரணமாக ஓட்டல் உரிமையாளர்கள் இழப்பை எதிர்கொண்டதால் அந்த வேலையையும் இழந்தார். அப்போதிருந்து, அவருக்கு இந்த டெலிவரி வேலை மட்டுமே இருந்தது, ”என்று சகோதரர் மனோஜ் கூறினார்.

திரிபாதியின் மனைவி சுசேதா கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பாதிப்பால் பிரிண்டிங் யூனிட்டில் முன்னாள் மெக்கானிக்கல் இன்ஜினியரான அவரது தந்தை இறந்துவிட்டார். “எங்களுக்கு இது சுலபமாக இல்லை… சலீலின் முதலாளிகள் அவருக்கு சம்பளத்தைக் கூட கொடுக்கவில்லை. பள்ளிக் கட்டணம் மற்றும் பிற செலவுகளைச் செலுத்துவதற்கு அவர் Zomatoவில் சேர வேண்டியிருந்தது. அவர் இரவும் பகலும் உழைத்தார்… வேலை சோர்வாக இருந்தது, அவர் அதிகம் சம்பாதிக்கவில்லை. நான் அவரைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டேன், ”என்று கூறினார்.

காவல்துறை டிசிபி (ரோகினி) பிரணவ் தயலின் கூற்றுப்படி, சனிக்கிழமை விபத்தை ஏற்படுத்தியவர் கான்ஸ்டபிள் ஜில் சிங் என்று அடையாளம் காணப்பட்டார், அதே இரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக நேரில் கண்ட சாட்சிகள் கூறியதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர் என்று கூறினார். “நாங்கள் இரத்த ஆல்கஹால் பரிசோதனை செய்தோம் மற்றும் மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம்,” என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

ஆனால் அதெல்லாம் குடும்பத்திற்கு கொஞ்சம் ஆறுதல். “நான் இப்போது என்ன செய்வது? நான் அவரை என்றென்றும் இழந்துவிட்டேன். என் மகன் தொடர்ந்து கேள்விகளைக் கேட்கிறான், ”என்று சுசேதா கூறினார், மேலும், அவர்கள் விரைவில் அயோத்திக்கு மாற உள்ளதாகவும் சுசேதா கூறினார்.

குடும்பத்தின் கூற்றுப்படி, திரிபாதி தினமும் 7-8 மணிநேரம் உணவு டெலிவரி செய்து, ஆர்டர்களின் எண்ணிக்கை மற்றும் பணிச்சுமையின் அடிப்படையில் மாதம் ரூ.8,000-ரூ.10,000 சம்பாதித்து வந்தார். கொரோனாவுக்கு முன், அவர் உணவகத்தில் மாதம் ரூ.40,000-50,000 சம்பாதித்து வந்தார்.

அவரது நண்பர் சமீர் கூறுகையில் “நாங்கள் ஒரே உணவகத்தில் பணிபுரிந்தோம், ஆனால் முதல் அலையின் போது பல ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர் கஷ்டப்படுகிறார் என்று எனக்குத் தெரியும், ஆனால் அவர் வலிமையானவர். அவர் ஒரு நேர்மையான மனிதராகவும் சிறந்த நண்பராகவும் இருந்தார். அவர் தனது குடும்பத்தை நேசித்தார், ஒருபோதும் குறை கூறியதில்லை என்று கூறினார்.

இன்னும் நிதி உதவி எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், Zomato அதிகாரி ஒருவர் தங்களைச் சந்திக்க வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்ட போது, ​​Zomato அதிகாரி ஒருவர் கூறினார்: “எங்கள் குழு ஏற்கனவே அவர்களைச் சந்தித்து, எங்கள் காப்பீட்டு கூட்டாளர்களின் உதவியுடன் நிதி உதவி வழங்கப்படுவதை உறுதிசெய்ய ஆவணங்களைச் சேகரித்துள்ளது. காப்பீட்டு பங்குதாரரின் தரப்பிலிருந்து தாமதம் ஏற்படலாம். அதற்கான செயல்முறையை ஆரம்பித்துள்ளோம். ஆதரவுக் குழு குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளது” என்றார்.

லாக்டவுனுக்குப் பிறகு அவர்கள் பயன்படுத்தும் டெலிவரி பார்ட்னர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார். மேலும், “அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் அல்லது தனிநபர்கள், அவர்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்வதற்கு முன் 2-3 மாதங்களுக்கு இடைக்கால வேலையை செய்ய விரும்புகிறார்கள்.” என்றும் அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: A life in covid salai tripathi zomato delivery executive dead delhi police

Best of Express